மோடி குறித்து சாதனை எம்.பி அர்ஜுன் ராம் மெக்வால்”

October-9-13

லோக்சபாவுக்கு, 534 எம்.பி.க்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படுகின்றனர். மக்கள் பிரச்னைகளை சபையில் அமர்ந்து பேசி, பிரச்னைகள் தீர பல வழிகளிலும் உதவ வேண்டும் என்பதற்காகத்தான் லோக்சபாவுக்கு, மக்கள் தங்கள் பிரதிநிதிகளை ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்ந்தெடுத்து, அனுப்பி வைக்கின்றனர். ஆனால், அந்த நடைமுறை ஒழுங்காக நடக்கிறதா என்று கேட்டால், வருத்தத்தோடு இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

“நானும் ஒரு எம்.பி., கூட்டத் தொடர் நடக்கும் போது டில்லிக்குப் போவேன். “அட்டண்டென்ஸ்’ போட்டு விட்டு வெளியே சென்று விடுவேன். என் சொந்த பணிகளை பார்த்துவிட்டு, ஊர் வந்து சேர்ந்து விடுவேன்- என்ற நிலைமையில் தான், பெரும்பாலான எம்.பி.,க்களின் நடவடிக்கைகள் உள்ளன. ஆனால், இதையும் தாண்டி, ஒருசிலர் இருக்கின்றனர். “இந்த வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது அபூர்வம். அதை வைத்து மக்களுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் செய்துவிட்டுத்தான் செல்வோம்…’ என்கிற, உறுதியோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.அப்படி செயல்படும் ஒருசிலரில் முக்கியமானவர், அர்ஜுன் ராம் மெக்வால். ராஜஸ்தான் மாநிலம், பிகானிர் தொகுதியைச் சேர்ந்தவர். ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக இருந்து, விருப்ப ஓய்வில் வெளியேறி, அரசியல்வாதியானவர். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவர், பா.ஜ.,வுக்கு பெருமை சேர்க்கும் எம்.பி.,க்களில் முக்கியமானவர். கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த, லோக்சபா கூட்டத் தொடர் அனைத்திலும் கலந்து கொண்டவர். ஒரே ஒருநாள் மட்டும் தான், உடல்நிலை சரியில்லாததால், லோக்சபா நிகழ்வில் பங்கேற்கவில்லை. கிட்டத்தட்ட, 414 விவாதங்களில் பங்கேற்று தன் கருத்தை பதிவு செய்திருக்கிறார். அதேபோல, தனிநபர் மசோதாக்கள் பலவற்றை முன்மொழிந்து அரசு தரப்புக்கு நிறைய உதவிகளை செய்திருப்பவர்.அவரின் இந்த சாதனைகளையெல்லாம் பாராட்டி, தமிழகத்தில் இருக்கும், “பிரைம் பாயின்ட் பவுண்டேஷன்’ என்ற அமைப்பு, அவருக்கு, “சன்சத் ரத்னா’ என்ற விருது வழங்கி கவுரவித்திருக்கிறது.

லோக்சபா நிலைக்குழு விவாதம் ஒன்றில் பங்கேற்க, சென்னைக்கு வந்திருந்த அவர் கூறியதாவது: பார்லிமென்ட்டின் லோக்சபா அமைப்பு என்பது, எவ்வளவு மதிப்பு வாய்ந்த, சக்தி வாய்ந்த அமைப்பு என்பது, இன்னும் பலருக்கும் புரியவில்லை. அதனால் தான், அங்கு உறுப்பினராக இருக்கும் பலரும், அங்கே நடக்கும் எந்த விவாதங்களிலும் பங்கேற்காமல் இருந்து விடுகின்றனர். மக்களுக்கு என்னவெல்லாம் தேவை என்பதை உணர்ந்து, அதை தீர்க்கக் கூடிய, ஒரு அற்புதமான அமைப்பாகத் தான், அது உருவாக்கப்பட்டு இருக்கிறது. மக்கள் நலனுக்குத் தேவையான எல்லா விஷயங்களையும், அந்த அமைப்பு மூலம் செய்ய முடியும். இந்த அடிப்படையான தத்துவத்தை, எல்லா உறுப்பினரும் புரிந்து கொண்டு நடக்க ஆரம்பித்தாலே போதும். நம் நாடு, எல்லா விதத்திலும் வலிமை பெற்ற ஒரு நாடாக ஆகிவிடும். நான் லோக்சபாவுக்கு தினசரி சென்றால், அதற்கு பாராட்டு கிடைப்பது ஏன்?மற்றவர்கள் சரியாக வரவில்லை என்பதால் தானே. அதனால் தான், எனக்கு விருது
கொடுக்கின்றனர்.

எல்லாரும் தங்கள் கடமையை உணர்ந்து செயல்பட்டிருந்தால், நான் லோக்சபாவுக்கு தினசரி சென்றது, ஒரு பெரிய விஷயமாக இருந்திருக்காது.எப்படியாவது மக்கள் சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணம், எனக்கு சிறுவயதில் இருந்தே உண்டு. ஒரு அரசு அதிகாரியாக இருந்து, நிறைய உதவிகளை மக்களுக்கு செய்யவேண்டும் என்று விரும்பினேன்.
அதற்காகவே, அரசு அதிகாரியானேன். பல்வேறு நிலைகளில், அரசுப் பணியில் இருந்து பணியாற்றி, மக்களுக்கு நிறைய உதவிகளை செய்திருக்கிறேன். அப்போதெல்லாம், மக்கள் என்னை மிக உயர்ந்த மனிதராக பார்த்து சந்தோஷப்பட்டதை பார்த்திருக்கிறேன். அரசியல்வாதிகள், லோக்சபா மூலமாகவும், சட்டசபை மூலமாகவும் இயற்றும் சட்டங்களை, செயல்படுத்தும் பொறுப்பில் இருக்கும், ஒரு அரசு ஊழியருக்கே இத்தனை மரியாதை என்றால், சட்டத்தையே உருவாக்கும் பொறுப்பில் இருக்கும் அரசியல்வாதிக்கு, கூடுதல் மரியாதை இருக்கத்தானே செய்யும்? அதுவும், லோக்சபா மூலமாக மக்களுக்கு சொல்ல முடியாத, செய்ய முடியாத காரியங்களே இல்லை என்று, சொல்லும் அளவுக்கு அதிகாரம் படைத்த அமைப்புக்கு, அரசியல்வாதியாக இருந்தால் தானே செல்ல முடிகிறது… அதற்காகவே, அரசியலில் நுழைந்தேன்!

மற்ற அரசியல் இயக்கங்களைக் காட்டிலும், பா.ஜ., தான் நாட்டின் மீது அதீத பற்று கொண்ட கட்சி. தேச பக்தியோடு தான், அவர்கள் எல்லா நிலைகளிலும் செயலாற்றுகின்றனர். குறிப்பாக, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் போன்றோர், தன்னலமற்று நாட்டுக்கு பாடுபட்டதை பார்த்து, ஈர்க்கப்பட்டேன்.வாஜ்பாய் போன்றவர்களின் தொடர்ச்சியாக, இன்றைக்கு நரேந்திர மோடி போன்ற முதல்வர்களும், பா.ஜ.,வுக்கும், இந்த நாட்டுக்கும் கிடைத்திருப்பது, அபூர்வம். அதை நாம் முழுமையாகப் பயன்படுத்தி, நரேந்திர மோடியை பிரதமராக்கினால், நாடு எல்லா துறைகளிலும் மேம்பட்ட நிலையை எட்டும் என்பதை, என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.நரேந்திர மோடி என்ன செய்து விட்டார் என்று, யாருக்காவது தெரியவேண்டும் என்றால், ஒரே ஒருமுறை அவர்களை, குஜராத்துக்கு சென்று வரச் சொல்லுங்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்பாக, எல்லா துறைகளிலும் கீழான நிலையில் இருந்த குஜராத் மாநிலத்தை, இன்றைக்கு, எப்படியெல்லாம் முன்னேற்றி இருக்கிறார் என்பதை கண்கூடாகப் பார்க்கலாம். ஒரு மாநிலத்தையே, பத்து ஆண்டுகளில் மாற்றிக் காட்டும் வல்லமை படைத்த ஒருவரின், அத்தனை திறன்களும், மாநிலத்தோடு முடங்கிவிடக் கூடாது.

அவரின் அனைத்து திறன்களும், நாடு முழுமைக்கும் பயன்பட வேண்டும். குஜராத்தில், 100 சதவீதம் என்று சொல்ல முடியாவிட்டாலும், கிட்டத்தட்ட அங்கே ஊழல், லஞ்சம், முறைகேடு என்று சொல்ல முடியாத அளவுக்குத் தான், ஆட்சி நிர்வாகம் நடந்து கொண்டிருக்கிறது. பல்வேறு விதமான, மக்கள் நலத் திட்டங்கள் அன்றாடம் செயல்படுத்தப்படுகின்றன. மின்சாரம், உணவு, வேளாண்மை உற்பத்தி என்று, மக்களுக்கு தேவையான அத்தியாவசிய விஷயங்களிலும், அந்த மாநிலம் தன்னிறைவு பெற்றிருக்கிறது. அரசு நிர்வாகம், வெளிப்படையான நிர்வாகமாக மாறி இருக்கிறது. அரசு அதிகாரிகளும், ஊழியர்களும், தங்கள் கடமை, பொறுப்பை உணர்ந்து, மக்களுக்காக பணியாற்றி வருகின்றனர்.

அப்படிப்பட்ட ஒரு நேர்மையான, தூய்மையான ஆட்சி தானே, இந்த சூழ்நிலையில் நாட்டுக்கு வேண்டும்? அதற்காகத் தான் நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்று சொல்கிறேன்.
பா.ஜ., உறுப்பினராக, இதை நான் சொல்லவில்லை; விரும்பவும் இல்லை. தேசத்தின் மீது பற்றுள்ள, ஒரு பிரஜையாக சொல்ல விரும்புகிறேன்.

கடந்த பத்து ஆண்டுகளில் இந்த நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி, நாட்டை கொள்ளையடித்து மக்களை சுரண்டி சாப்பிட்டு விட்டது. இனியும் அவர்களை ஆட்சிப் பொறுப்பில் இருக்க விட்டோமானால், நாடு சுடுகாடாகி விடும். இதை, மக்கள் தீர்க்கமாக உணர்ந்து விட்டனர். அதனால் தான், மாற்றத்துக்காக ஏங்கிக் கொண்டிருந்தவர்கள், நரேந்திர மோடி என்னும் அபூர்வ மனிதரின் பலம் உணர்ந்து, அவர் பின்னால் அணிவகுக்க துவங்கி உள்ளனர். இனி கவலையில்லை; நாட்டுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது.ஊழலை செய்தவர்கள் அதை திறமையாக மறைக்கப் பார்த்தும், முடியவில்லை. எல்லா ஊழல்களும் வெளிச்சத்துக்கு வந்து விட்டன. ஆனாலும், அந்த ஊழலை மறைக்க, அவர்கள் எடுக்கும் முயற்சிகள் இருக்கிறதே- மோசம்!

ஆவணங்களை திருடுகின்றனர்; காணாமல் போகச்செய்கின்றனர்; விசாரணை அமைப்பான, சி.பி.ஐ.யை மிரட்டுகின்றனர். சட்டத்தின் சந்து பொந்துகளில் எல்லாம் புகுந்து, திருட்டுத்தனம் செய்கின்றனர். கடந்த பத்து ஆண்டுகளில் தான், நாட்டில் ஊழல் மிக அதிகமாக நடந்திருக்கிறது. அதை வைத்துப் பார்க்கும்போது, ஊழல் விஷயத்தில், காங்கிரஸ் கட்சியோடு, யாராலும் போட்டி போட முடியாது என்பது தெளிவாகிறது.முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தேசத்துக்கு கிடைத்த அற்புதமான மனிதர். அவர் இந்த நாட்டின் வளர்ச்சிக்காக, தன் மூளையை கசக்கி சிந்திக்கும் விஷயங்கள் அனைத்தையும் செயல்படுத்தினால், இந்தியா கண்டிப்பாக வல்லரசாகும். பொருளாதார வளர்ச்சி முதல் கொண்டு, குற்றம் இல்லா நாடாக உருவாக்குவது வரை, எல்லா வகைகளிலும் முதன்மை நாடாவோம். அவரிடம், நாட்டின் வளர்ச்சிக்கான பல விஷயங்கள் குறித்து பேசினோம். எல்லாமே தொழில்நுட்ப ரீதியான விஷயங்கள் தான். இருந்தாலும், அதையெல்லாம் செயல்படுத்த, ஆர்வமாகவும், தீவிரமாகவும் இருக்கிறோம்.

நாட்டின் தண்ணீர் வளத்தை பெருக்குவது குறித்து, கலாம், நிறைய ஆலோசனைகளைச் சொன்னார்.’லோக்சபா நடவடிக்கைகளை அறிவதற்காக, “பார்லிமென்டரி ரிசர்ச் சர்வீஸ்’ என்ற தனியார் அமைப்பு ஒன்று, சிறப்பாக சேவையாற்றிக் கொண்டிருக்கிறது. லோக்சபாவில் கொண்டு வரப்படும் மசோதாக்கள், முக்கியமான பிரச்னைகள் குறித்தெல்லாம் தொடர்ச்சியாக அந்த அமைப்பு, தொடர்புடைய வல்லுனர்களை கொண்டு வந்து, கருத்தரங்குகளை நடத்துகிறது. அந்த கருத்தரங்குகளில் கலந்து கொண்டால் போதும். லோக்சபாவின் நடைமுறைகள் அனைத்தையும், அத்துபடியாக தெரிந்து கொள்ளலாம். ஆர்வம் இருந்தால் தான், லோக்சபா செயல்பாடு குறித்து, அறிந்து கொள்ள முடியும். இது இலவசமாகவே கிடைக்கிறது. இதை உறுப்பினர்களாகும் எல்லாரும், பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அர்ஜுன் ராம் மெக்வால் கூறினார்.

நன்றி; தினமலர்


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service