மோடியின் பிரசார உத்திகள்”

April-27-14

பா.ஜ., பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, ஒற்றை மனிதராக இருந்து கொண்டு, தேர்தலில் வெற்றி பெறும் புதிய உத்திகளை கட்டமைத்து வருகிறார். மனிதவளம்  ஒருபுறம் இருந்தாலும், இணையதளம், மொபைல் போன்றவற்றின் மூலம், இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம், தன்னை பதிவு செய்துள்ளார். அவரது தன்னம்பிக்கை, முன்கூட்டியே சரியாக திட்டமிடுதல் போன்றவற்றின் மூலமே இது சாத்தியமானது.
மோடி மற்றும் அவரது குழு எவ்வாறு இதை சாத்தியப்படுத்தியது என பத்திரிகையாளர் ஷீலா பட் எழுதுகிறார்:
இந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., முழு நம்பிக்கையுடன் செயல்படுகிறது. அக்கட்சியின் நம்பிக்கைக்கு தனிமனிதரான மோடி தான் காரணமாக உள்ளார்.

கடின உழைப்பும் திட்டமிடலும்:

 அமெரிக்க அதிபர், ஆஸ்திரேலிய அதிபர் என யாராக இருந்தாலும் என்னை வந்து பார்க்கட்டும், என மோடி தெரிவித்தது, நம்பிக்கையின் உச்சகட்டம். இதை ஆணவம், அதீத நம்பிக்கை என எதிக்கட்சிகள் கூறுகின்றன. மோடி இப்படி தெரிவிப்பதற்குப் பின், கடின உழைப்பு உள்ளது. மோடி மற்றும் அவரது குழுவினரின் திட்டமிடல், தொழில்நுட்பம் மிகச்சிறப்பானவை.
எடுத்துக்காட்டாக, உ.பி.,யிலிருந்து சேலை வியாபாரிகள், தங்களது ஜவுளிகளை பார்சல் மூலம் சூரத்திலிருந்து பெறுவர். ஒவ்வொரு பார்சலில் உள்ள துணியிலும், மோடிக்காக ஓட்டளியுங்கள் என எழுதிய நோட்டீசை வைத்து அனுப்புவர். இவ்வாறு சிறு விஷயத்திலும் கவனம் செலுத்தி, மோடியின் பெயரை பதிவு செய்தனர்.
மோடியின் இந்த திட்டமிடல், சளைக்காத உழைப்பு ஆகியவை பா.ஜ.,வை தேர்தலில் தனித்துவப்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்க முடியாத காங்., கட்சி மீண்டு வர பல காலமாகும்.சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், இடதுசாரி, தென்மாநில கட்சிகள் போன்றவை கூட, இதுபோன்ற நுட்பமான உத்தியை பின்பற்றுவதில்லை.

கதாநாயகி ‘மொபைல் போன்’:

மோடியின் பெயரை உ.பி.,யின் நகரங்களில் உச்சரிப்பதை விட, கிராமங்களில் அதிகம் உச்சரிக்கின்றனர். மொபைல் தொழில்நுட்பத்தின் மூலம் இதை சாத்தியப்படுத்தியுள்ளார். மோடி, கதாநாயகன் என்றால், மொபைல் போன் கதாநாயகி. மொபைல் போன் இந்தியத் தேர்தலின் இலக்கணத்தையே மாற்றியுள்ளது.
பிரஜேஷ் சுக்லா எனும் மூத்த பத்திரிகையாளர், கடந்த எட்டு வாரங்களாக உ.பி.,யின் கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்தார். அங்குள்ள ஏழை, எளிய மக்கள், ஒரே நம்பிக்கையாக மோடியின் பெயரை உச்சரிக்கின்றனர் என கூறுகிறார்.
ஏ.பி.பி., பத்திரிகையின் எடிட்டர் பங்கஜ் ஜா, உ.பி.,யிலுள்ள 80 லோக்சபா தொகுகளில் 62 தொகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார். கிராமங்களில், மோடியின் பெயருக்கு தனி செல்வாக்கு இருப்பதை பார்த்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன் மோடிக்கு இவ்வளவு ஆதரவில்லை. தற்போது மோடியின் பிரசார உத்தியினால், சரியில்லாத பா.ஜ., வேட்பாளர்களாக இருந்தாலும், மோடிக்காக ஓட்டளிப்போம் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தேர்தலில் இந்திய கட்சிகளின் அரசியல் கலாசாரத்தையும், தேர்தல் உத்தியையும் மோடி கண்டிப்பாக மாற்றியுள்ளார்.

கால் சென்டர் போல:

மோடியின் பிரசார உத்தியையும், தொழில்நுட்ப பயன்பாட்டையும் பா.ஜ.,வின் லக்னோ தலைமை அலுவலகத்துக்கு சென்றால் கண்கூடாக காணலாம். முழுவதும் இளைஞர்களால் நிரம்பிய அவ்வலுலகத்தில், கம்ப்யூட்டர்கள், சர்வர்கள் சூழ ஒரு கால் சென்டர் அலுவலகம் போல செயல்படுகிறது. இந்த இளைஞர்கள் குழுவுக்கு, சுனில் பன்சால் (43) என்பவர் தலைமை வகிக்கிறார். உ.பி.,யில் மோடியும், அமித் ஷாவும் பிரசார குழு தலைவர்களாக உள்ளனர். உ.பி., அலுவலகத்தில் எளிய மக்களும் புரியும்படியான விதத்தில், மொபைல் மூலமாக மக்களுக்கு பா.ஜ., கருத்துகள் சென்று சேர்கின்றன. இளைஞர்கள் குழு 1,07,000 கிராமங்களுக்கு மொபைல் மூலம் மோடியின் கருத்தையும், பா.ஜ.,வின் திட்டங்களையும் சென்று சேர்த்துள்ளனர்.
நகரங்களை விட, கிராமங்களுக்கு சென்றடையவே அக்குழுவினர் திட்டமிடுகின்றனர். இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உள்ள, திறமையான இளைஞர்கள் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். தங்களின் நல்ல வேலையை கூட உதறி விட்டு வந்துள்ளனர். இங்கு ஆறு மாதம் பணிபுரிவதன் மூலம் நாட்டுக்கு உழைத்த பெருமை உங்களை சேரும் என குழு தலைவர் பன்சால் இளைஞர்களை ஊக்கப்படுத்தியுள்ளார். கால் சென்டரில் சிறந்த அனுபவம் உள்ளவர்களும், பவர் பாயின்ட்களில் சிறந்த விளக்கக் காட்சி தயாரிக்கும் நிபுணர்களும், கணிப்பொறித் துறையில் ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களும், இக்குழுவில் அதிகம் இருக்கின்றனர்.
ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பா.ஜ., பிரமுகர்கள் மூலம் லட்சக்கணக்கான மக்களின் பயோடேட்டா வாங்கப்படுகிறது. அதில் பெயர், முகவரி, தொகுதி, மொபைல் எண் வாங்கப்படுகிறது. அங்கு குறிப்பிட்ட தொகுதி மக்களுக்கு, குறிப்பிட்ட செய்திகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்தியாவில் கிட்டத்தட்ட 90 சதவீத வாக்காளர்களிடம் மொபைல் போன் உள்ளது. மொபைல் போன் மூலம், ஒவ்வொரு வாக்காளரையும் எளிதில் அணுகலாம் எனும் உத்தியை, பா.ஜ.,வின் இக்குழு பயன்படுத்தியுள்ளது.
உ.பி.,யில் ஏறக்குறைய அனைத்து வாக்காளர்களின் மொபைல் எண்ணும் வாங்கப்பட்டு, கால் சென்டர் குழுவால் அணுகப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை நேரடியாக தெரிந்து கொள்ள முடிந்தது. அதற்கேற்ற பிரசார உத்தியை தயாரித்து ஓட்டுகளை கவர்ந்துள்ளனர்.

வேன்கள் மூலம் வீடியோ பிரசாரம்:

உ.பி.,யில் 30 சதவீத வாக்காளர்கள் இருளில் உள்ளனர். அமேதியில் உள்ள பத்து பஞ்சாயத்துகளில் மின்சாரம் என்றால் என்ன என்பதே தெரியாது. செய்தித்தாள், ரேடியோ, டிவி என எதுவும் இருக்காது. அதனால், அங்கு பல லட்சம் மக்களுக்கு, நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாது.
அதுபோன்ற மக்களிடம் நேரடியாக சென்று விவரங்களை சேகரித்தனர். அதற்கு ஜி.பி.எஸ்., வசதியுடன் கூடிய 400 வேன்கள் பயன்படுத்தப்பட்டன. அதில் மோடியின் வீடியோக்கள் காண்பிக்கப்பட்டன. குழந்தைகளுக்கு மோடி முகமூடியும், வாசகம் அடங்கிய நோட்டீஸ்களும் வழங்கப்பட்டன.
மோடி என்றால் மாற்று சக்தி எனும் விதையை மக்களிடம் விதைத்துள்ளனர். மோடி, உ.பி.,யின் தேவைகளை உணர்ச்சிகரமாக பேசக்கூடிய, 16 நிமிட வீடியோ மெசேஜ், பல ஏழை எளிய மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு சிறந்த வரவேற்பு இருந்தது. இந்த திட்டத்தின் மூலம், 50 லட்சம் வாக்காளர்களை நேரில் சந்திக்க முடிந்தது.

சமூக வலைத்தளங்கள்:


நகரப்பகுதிகளில் உள்ள வாக்காளர்களை கவர ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்கள், வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் போன்றவை பயன்படுத்தப்பட்டன. உ.பி., இளைஞர்கள், செய்திகளை அறிய ஆவலாய் இருந்தனர். அவர்களுக்கு செய்திகளை அனுப்பவும், விவாதங்களில் பங்கேற்க செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மோடியின் திட்டங்களை கூறும் விளக்கக்குறிப்புகள், நமோ கிட் போன்றவை வழங்கப்பட்டன. இதன் மூலமும் கருத்துகள் மக்களை சென்றடைந்தன. தேர்ந்த நிபுணர்கள் இரவு, பகல் பார்க்கமால் உழைத்தனர். அவர்களின் தொழில்நுட்ப ரீதியிலான திட்டமிடல், அனுபவம் ஆகியவை பெரிதும் பயன்பட்டன.

நன்றி; தினமலர்


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service