மோடியின் குஜராத் – நூல் மதிப்புரை”

March-11-13

வயல்வெளிகள் எல்லாம் கட்டிடங்களால் காணாமல் போய்விட்டன. ஏரிகளைப் பங்கு போட்டு ஏராளமாய் அரசியல்வாதிகள் சம்பாதித்துவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு தமிழகத்தில் பல வருடங்களாக அடிபடுகிறது.

“நீராதாரங்களை பாதிக்கும் வகையில் குடியிருப்புகளை உண்டாக்குவது தவறு” என்று மதுரை உயர்நீதி மன்றமும் தனது தீர்ப்பு ஒன்றில் குறிப்பிட்டிருந்தது. இதை விடக் கொடுமை இருக்க முடியாது என்று நினைக்கிறேன். இந்தத் தீர்ப்பை வெளியிட்ட மதுரை உயர்நீதி மன்றமே உலகநேரி கண்மாய் என்ற ஏரியின் பரப்பில் தான் கட்டப்பட்டிருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும். இது தான் தமிழர்களின் தலைவிதி.

சினிமா மீதும் பரபரப்பு அரசியல் மீதும் உள்ள ஆர்வத்தால் ஒரு தலைமுறையையே வீணடித்துவிட்ட தமிழ்நாட்டில் , ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் புத்தகம் ஒன்று வெற்றிகரமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் இந்தச் செய்தி வந்து முட்டுகிறது.

modibook1“இப்போதெல்லாம் கல்யாணங்களில் இதைத்தான் பரிசாகக் கொடுக்கிறேன். இதைப் படித்துவிட்டீர்களா?” என்று திரு.இல. கணேஷன் கேட்டார். இந்தக் கேள்வியை இதற்கு முன்பே மூன்று பேர் கேட்டுவிட்டார்கள். இதற்கு மேல் தாமதம் செய்தால் கமல் பக்கம் கட்சி மாறிவிட்டதாக நினைப்பார்கள் என்பதால் தி.நகரில் உள்ள கிழக்கு புத்தகக் கடைக்குப் போய் “ மோடியின் குஜராத்” புத்தகத்தை வாங்கினேன்.

வீடு திரும்பும் வழியில் ஒரு அலைபேசி அழைப்பு. புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி. ஞானாலயா என்பது கிருஷ்ணமூர்த்து உருவாக்கியுள்ள நூல்நிலையத்தின் பெயர். இங்கு 85000 புத்தகங்கள் இருக்கின்றன. புத்தகங்களைப் பாதுகாப்பதற்காகவே இவர் பாச்சை உருண்டைகள் வாங்குவதற்காக ஆண்டிற்கு ரூ25000 செலவழிக்கிறார்.

நல்ல படிப்பாளியான கிருஷ்ணமூர்த்தி தற்காலக் கல்விமுறை பற்றி தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினார். தமிழில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்யும் ஒரு ஆசிரியர் “பெரிய புராணத்தில் ஆண்டாளைப் பற்றிய செய்தி எங்கே இருக்கும்” என்று கேட்டாராம். இது கூடப் பரவாயில்லை. இன்னொரு ஆசிரியர் “ கவுந்தி அடிகள் ஆணா? பெண்ணா?” எனக் கேட்டாராம். கிருஷ்ணமூர்த்து மேலும் தன் உளக்குமுறலை வெளிப்படுத்த வழியில்லாமல் எனது செல்லில் சார்ஜ் போய்விட்டது.

செல் வேலை செய்ய வேண்டுமானால் முந்தைய இரவே அதை சார்ஜ் செய்யவேண்டும் என்பது அடிப்படை விதி. ஆனால் சார்ஜ் செய்வதற்கு மின்சாரம் வேண்டும் என்பது அதனுடைய உபவிதி. நாம் இருப்பது தமிழ்நாடு சுவாமி. நம்முடைய வயிற்றெரிச்சலை அதிகப்படுத்தவே சரவணன் தங்கதுரை “மோடியின் குஜராத்” என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

பக்.16 – மற்ற மாநிலங்கள் எல்லாம் மின்சாரத்துக்காகச் சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போது , குஜராத்தில் மட்டும் எப்படி மின்சாரம் உபரியாகக் கிடைக்கிறது?

பக்.18 – முதல்கட்டமாக விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்குவதற்காக மின் இணைப்பு வலை ஒன்று அமைக்கப்பட்டது. அதற்காக 2559 மின்மாற்றிகள் நிறுவப்பட்டன. மற்ற உபயோகங்களுக்கு தனி இணைப்பு ஒன்று அமைக்கப்பட்டது, இதன் மூலம் விவசாயிகளுக்கு தடையற்ற மின்சாரம் உறுதி செய்யப்பட்டது. இவ்வாறு மின்வினியோகத்தை இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்ததன் மூலம் குஜராத் மாநிலம் எத்தகைய சூழ்நிலையிலும் முழுமையாக இருளில் மூழ்காது என்ற நிலை ஏற்பட்டது.

modi3

பக்.24 – குஜராத் அரசு 2009-ம் ஆண்டு சூரிய சக்திக் கொள்கையை அறிவித்தது. இது தனியார் முதலீடுகளை இத்துறைக்கு ஈர்ப்பதர்கு ஏதுவாக அமைந்தது. சுமார் 87 தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களை குஜராத்துக்கு கொண்டுவந்ததோடு சுமார் 961.5 மெகாவாட் அளவு மின்சாரத்தை சூரியசக்தியிலிருந்து பெறுவதற்கான வாய்ப்பாக அமைந்தது.

பக்.32 – இந்திய அளவில் விவசாயத்தின் வளர்ச்சி 3.5 சதவீதமாக இருக்கும் நிலையில் குஜராத் கடந்த பத்து ஆண்டுகளாக 9.6 சதவீத வளர்ச்சியைக் கண்டிருக்கிறது.

குஜராத் பருத்தி , சீனா போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமது செய்யப்படுகிறது. சீனாவில் போய் “குஜராத்” என்று சொன்னால் அவர்கள் பருத்தி என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு சீனாவில் குஜராத் பிரபலமாகிவிட்டது.

பக்.41 – குஜராத் மாநிலத்தைப் பொருத்தமட்டில் 2000-01ம் ஆண்டு நிலவரப்படி ஒன்றாம் வகுப்பி முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிப்புக்கு முழுக்குப் போட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 20.93 சதவீதமாக இருந்தது. இந்த எண்ணிக்கை 2010-11ம் ஆண்டில் 2.09 சதவீதமாகக் குறைந்தது.

modi05

பக்.43 – “ஓர் ஆண் கல்வி கற்பதால் ஒரு வீட்டுக்குத்தான் பயன். ஆனால் ஒரு பெண் கல்வி கற்பதால் இரண்டு வீடுகள் பயனடைகின்றன” என்கிறார் நரேந்திர மோடி.

பக்.129 – ஜன26, 2001. இந்தியாவின் 51வது குடியரசு தினத்தன்று ஏற்பட்ட நிலநடுக்கம் குஜராத்தின் கட்ச் பகுதியை மையமாகக் கொண்டிருந்தது. தெருக்களில் ஊர்வலமாக தேசபக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டு தேசியக்கொடி ஏற்றுவதற்காக பள்ளிக்கூடம் சென்று கொண்டிருந்த 250 மாணவர்கள் உட்பட சுமார் 20000 பேர் இந்த நிலநடுக்கத்தால் கொல்லப்பட்டனர். கட்ச் பகுதியிலிருந்து 250 கி.மீ தூரத்தில் உள்ள அகமதபாத்தில் கூட நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்றால் அதன் பாதிப்பை சற்று நினைத்துப் பாருங்கள். ஆனால் குஜராத் அசரவில்லை. பெரும்பாலான கிராமங்கள் இரண்டே ஆண்டுகளில் சீரமைக்கப்பட்டன.

இன்று உலகின் பல பகுதிகளில் பேரிடர் அழிவுகள் ஏற்பட்டால் அவர்கள் மறுசீரமைப்பு பணியை ஆரம்பிப்பதற்கு முன் குஜராத்திற்கு வருகை தருகிறார்கள், கட்ச் பகுதியில் எப்படி மறுசீரமைப்புப் பணிகள் திட்டமிடப்பட்டன, நடைமுறைப்படுத்தப்பட்டன போன்ற விவரங்களை அறிந்து கொள்கிறார்கள். மோடியின் வித்தையை மின்சாரம் , விவசாயம் , குடிநீர் , சுகாதாரம் , உள்கட்டமைப்பு என்று பல்வகையாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் சரவணன் தங்கதுரை.

கடுமையான களப்பணியில் உருவான இந்தப் புத்தகத்தில் சொல்லப்படும் ஒரு விஷயத்தில் மேலும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

modi06

இந்தியாவில் நதிநீர் இணைப்புத் திட்டம் உருவாகாமல் போவதற்கு காரணம் அக்கறையின்மை என்கிறார் இவர். அது உண்மை அல்ல. இந்தத் திட்டத்தில் தொழில்நுட்பச் சிக்கல்கள் உள்ளன. வடக்கில் இருக்கும் சமவெளியையும் , தெற்கில் இருக்கும் பகுதியையும் நடுவில் இருக்கும் மலைத்தொடர்கள் தடுக்கின்றன. நதிநீரை இந்த இடத்தில் மேலே ஏற்றுவது சாத்தியமில்லை.

மற்றபடி ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி போன்ற அறிஞர்கள் கவலை கொள்ளும் கல்வித்துறையில் மோடி என்ன செய்திருக்கிறார் என்று கேட்டீர்களானால் உங்களுக்கு இந்தப் புத்தகம் போதாது. புறப்படுங்கள். பூமத்தியரேகையை கடக்காமலேயே குஜராத்தைப் பார்த்துவிடலாம் – மோடியின் குஜராத்தை.

மோடியின் குஜராத்
ஆசிரியர்: சரவணன் தங்கதுரை
வெளியீடு: கிழக்கு பதிப்பகம், சென்னை
விலை: ரூ. 100

நன்றி ; திராவிடமாயை சுப்பு


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service