மக்கள் பணியில் நவீன தகவல் தொழில்நுட்பம்”

May-24-13

மக்களுக்காக, மக்களை மையப்படுத்தியே அரசை நடத்திவரும் நரேந்திர மோடி 2003-ம் ஆண்டு ஒரு புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தினார். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கடைக்கோடி மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து தீர்வுகாணும் திட்டம்தான் அது.

‘ஸ்வாகத்’ என்று அழைக்கப்படும் இத்திட்டத்தின் வாயிலாக, பொதுமக்கள், கீழ் மட்டத்தில் தீர்க்க முடியாமல் போய், பின்னர் மாவட்ட அளவிலும் தீர்க்க முடியாத பிரச்னைகளை முதல்வர் நரேந்திர மோடியின் நேரடிப் பார்வைக்கு எடுத்துச் செல்கின்றனர். அவர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் சேர்ந்து, தீர்வு காண்கிறார்.

 முதல்வரிடம் பேசலாம்:

மூன்று அடுக்காகச் செயல்படும் இத்திட்டத்தின் முதல் நிலை, தாலுகா அளவில் பிரச்னைகளைத் தீர்க்க முயல்வது. அடுத்து மாவட்ட அளவில். அங்கேயும் தீர்வு காண முடியாவிட்டால் முதல்வரின் துணையுடன் பிரச்னையைத் தீர்ப்பது. மக்கள் தங்களின் குறைகளுக்குத் தீர்வு காண அவர்கள் தாலுகாவைத் தாண்டி வரவேண்டிய அவசியம் இல்லை. மாநிலத்தின் அனைத்து மாவட்ட, தாலுகா மற்றும் அரசு அலுவலகங்கள், இணைய இணைப்புமூலம் இணைக்கப்பட்டுள்ளதால், பிரச்னைக்கு எளிதாக, வேகமாகத் தீர்வு காணமுடிகிறது.

பொதுமக்கள், தாலுகா மற்றும் மாவட்ட அலுவலகங்களில் இருந்தபடியே, வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக நேரடியாக முதல்வரிடம் பேச முடியும்.

ஒவ்வொரு மாதத்தின் நான்காவது புதன்கிழமை, தாலுகா மற்றும் மாவட்ட அளவில், பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படுகிறது.

அங்கே தீர்வு காணப்படாத பிரச்னைகள், அடுத்தநாள் (மாதத்தின் நான்காவது வியாழக்கிழமை) முதல்வரின் பார்வைக்கு வருகிறது. மாநில அளவில் நடைபெறும் இந்தக் குறைதீர்க்கும் நிகழ்ச்சியில், முதல்வர் நரேந்திர மோடி, துறைச் செயலர்கள், சம்பந்தப்பட்ட கீழ்நிலை அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர் ஆகியோர் வீடியோ திரையில் தோன்றி, நேரடியாக உரையாடி, பிரச்னையைத் தீர்க்கிறார்கள்.

இங்கே கீழ்க்காணும் படிகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் நான்காவது வியாழக்கிழமை, காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை குறைகளை ஆன்லைனில் பதிவு செய்யவேண்டும். உடனே அது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் போய்ச் சேரும். பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, சம்பந்தப்பட்ட அதிகாரி, அவரது பதிலை ஆன்லைனில் பதிவு செய்வார்.

பிற்பகல் 3 மணியிலிருந்து முதல்வர் நரேந்திர மோடி, உயர் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர், காவல் துறை அதிகாரி, தாலுகா அதிகாரி, மனுதாரார் ஆகியோர் சேர்ந்து புகாருக்குத் தீர்வுகாண்கிறார்கள்.

புகாருக்கான தீர்வுகள் ஆன்லைனில் பதிவு செய்யப்படுகின்றன. முடிந்தவரை அன்றைய தினமே பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படுகிறது. இல்லை என்றால் பிரச்னையின் தன்மையைப் பொருத்து, தொடர்புடைய அனைவரும் ஒப்புக்கொண்ட நாட்களுக்குள் பிரச்னைக்குத் தீர்வு காண்கிறார்கள்.

 ஜனநாயகத்தின் அர்த்தம்:

முதல்வர் நரேந்திர மோடியே குறைகளைத் தீர்க்க மாதந்தோறும் நேரம் ஒதுக்குவதால், தாலுகா அளவிலேயே பெரும்பாலும் புகார்களுக்குத் தீர்வு காணப்படுகின்றன. அப்படியும் முடியாவிட்டால், மாவட்ட அளவில் தீர்வு காண்பதற்கே அதிகாரிகள் முனைகின்றனர். இதனால் புகார்களுக்கு அதிகாரிகள் உடனடியாகத் தீர்வு காணும் பழக்கம் குஜராத்தில் நடைமுறைக்கு வந்துவிட்டது.மக்களுக்கும், ஜனநாயகத்தின் அர்த்தம் புரிய ஆரம்பித்திருக்கிறது.

பொதுமக்கள் நெடுந்தூரம் பயணம் செய்து முதல்வரையோ அல்லது உயர் அதிகாரிகளையோ சந்திக்கும் நிலை போய், டிவி மாதிரி, அவர்களே ஒவ்வொரு குடிமக்கள் முன்பும் தோன்றி, அவர்களது தனிப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்க முயல்வது உண்மையிலேயே புரட்சிதான்.

அதுமட்டுமல்ல, நவீன தொழில்நுட்ப வசதிகள், ஜனநாயகத்தை நிலைநாட்ட உதவும் என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணம். (பெரும்பாலான மாநிலங்களில் வீடியோ கான்ஃபரன்சிங் தொழில்நுட்பத்தை, அடிக்கல் நாட்டுவதற்கும் திறப்பு விழாவுக்கும் மட்டுமே முதல்வர்கள் பயன்படுத்துகின்றனர்.)

2010-ம் ஆண்டுக் கணக்குப்படி, சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள், இத்திட்டத்தின் வாயிலாகத் தங்கள் குறைகளுக்குத் தீர்வு கண்டுள்ளனர்.

இத்திட்டத்தினைப் பாராட்டி, வெளிப்படையான, பொறுப்புள்ள, கடமையுள்ள பொதுமக்கள் சேவைக்கான விருதை, 2010-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை குஜராத்துக்கு வழங்கிச் சிறப்பித்துள்ளது.

 ஒரே நாளில் சேவை:

தாலுகா மற்றும் கலெக்டர் அலுவலகங்களுக்கு ஏதேனும் அடிப்படை வேலைகளான ரேஷன் கார்டு விண்ணப்பித்தல், பெயர் திருத்தம் செய்தல் போன்ற வேலைகளுக்காக நேரடியாகச் சென்ற அனுபவம் உங்களுக்கு உண்டா? அத்தகைய வேலைகளைப் பற்றி நினைத்தாலே, எப்படியும் பல தடவை நடையாக நடக்க வேண்டியிருக்கும், அல்லது ஏதாவது தரகர்களையோ நாடிக் கொஞ்சம் காசு கொடுத்தால் வேலையைச் சீக்கிரமாக முடித்துவிடலாம் என்று எண்ணுபவர்கள்தான் அதிகம்.

அந்த அளவுக்கு நமது அரசு அலுவலகங்கள் திறனற்றுச் செயல்படுகின்றன. பெரும்பாலான அலுவலகங்களில் பியூன்கள்தான் ஊழலின் ஊற்றுக்கண்ணாகத் திகழ்கிறார்கள். அல்லது அலுவலகத்துக்கு எதிரே இருக்கும் பெட்டிக்கடை, நிற்கும் கார் இப்படிப் பலவிதமான திறமையான, புதுமையான முறைகள் லஞ்சம் பெறப் பயன்படுத்தப்படுகின்றன.

இத்தகைய அலுவலகங்களுக்கு சாவு மணிதான் குஜராத் அரசின் ‘ஒரே நாளில் சேவை’ திட்டம். இத்திட்டம் இப்போது ஜன் சேவா கேந்திராமூலம் செயல்படுத்தப்படுகிறது.

தகவல் தொழில்நுட்ப வசதியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் மக்கள் அடிப்படைச் சேவைகளை சுமார் 20 நிமிடத்திலிருந்து 3 மணி நேரத்துக்குள்ளாக அல்லது அதே நாளில் பெற முடியும். அதிலும் இடைத்தரகர்கள் இல்லாமலே. ஏன், உங்கள் சேவையை மேற்கொள்ளும் அரசு ஊழியர் யார் என்றுகூட நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய தேவையில்லை.

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? இது நம் நாட்டிலும் சாத்தியமே என்பதை மோடி அரசு 2003-லிருந்து குஜராத்தில் செயல்படுத்தி வருவதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம்.

 மக்கள் பணியில் நவீன தகவல் தொழில்நுட்பம்:

1990-களில் இந்தியாவின் தென் மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் போன்றவை, தகவல் தொழில்நுட்பத்துறையில் பெரும் வளர்ச்சி அடைய ஆரம்பித்தன. அந்த அலையை குஜராத் மாநிலம் தவற விட்டுவிட்டது.

மேற்குறிப்பிட்ட மாநில அரசுகள், தகவல் தொழில்நுட்பத் துறைமூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியதோடு, கணிசமான அந்நியச் செலாவணியையும் பெற்று வருகின்றன. ஆனால், தங்கள் மாநில அரசுப் பணிகளில், தகவல் தொழில் நுட்பத்தைத் பயன்படுத்துவதில் மந்தமாகவே செயல்பட்டு வந்துள்ளன.

ஆனால், நவீன தகவல் தொழில்நுட்பத்தை மக்கள் பணிகளுக்குப் பயன்படுத்துவதில், வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இன்று குஜராத் மாநிலம் திகழ்ந்துவருகிறது.

நரேந்திர மோடி முதலமைச்சராகப் பொறுப்பேற்றபின், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் ஆரம்பித்து, பல்வேறு புது முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

2001-ல் நரேந்திர மோடி முதல்வர் ஆனபோது, முதல்வரின் அலுவலகம் உட்பட, தலைமைச் செயலகத்தில் கணினியைக் காண்பதே அரிதாக இருந்தது. அதன் பயன்பாடு மிகக் குறைவாகவே இருந்தது. கணினி என்பது ஓர் அறிவியல் அதிசயமாக மட்டுமே பார்க்கப்பட்டது.

 மின்னஞ்சல்மூலம் தகவல்:

நரேந்திர மோடி இந்த நிலையை மாற்ற ஒரு கொள்கை முடிவை அறிவித்தார். முதலமைச்சர், இனி தகவல்களை மின்னஞ்சல்மூலம் மட்டுமே அனுப்புவார்!

அந்தச் சிறு தொடக்கம், கடந்த 12 ஆண்டுகளில் குஜராத்தை, தகவல் தொழில்நுட்பத்தை மக்கள் பணிக்குப் பயன்படுத்தும் மாநிலங்களின் முன்னணியில் கொண்டுபோய் நிறுத்தியுள்ளது.

மத்திய, மாநில அரசுகள், தகவல் தொழில்நுட்பத்துக்கு நிதியைத் தயங்கித் தயங்கி அனுமதித்துக்கொண்டிருந்தபோது, மோடி அரசு எல்லாத் துறைகளும், தங்கள் நிதியில் 2 சதவீதத்தை தகவல் தொழில்நுட்பத்துக்குச் செலவிடவேண்டும் என உத்தரவிட்டது. இது மாநில நிதிநிலை அறிக்கையிலும் எதிரொலித்தது. 2005-லிருந்து தகவல் தொழில்நுட்ப நிதி 3 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

பெரும்பாலான மாநிலங்கள் இன்று தகவல் தொழில்நுட்பத் திட்டங்களை உருவாக்கத் தொடங்கியுள்ளன. ஆனால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. காரணம் ஒரு திட்டத்தின் வெற்றியானது, அதனைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை, படிப்பறிவற்ற மக்களாலும் எளிதில் பயன்படுத்தக்கூடிய நிலைமை, மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வது போன்ற பலவற்றைக் கொண்டு அமைகிறது.

அந்த வகையில், குஜராத் அரசு முன்னணியில் இருக்கிறது. தேர்ந்தெடுக்கும் திட்டங்கள், சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுடன் இணைந்து செயல்படுத்தும் விதம், மக்களை ஈடுபடுத்தி, கடைக்கோடி மக்களுக்கும் அவற்றைக் கொண்டு சேர்த்து, அவர்களுக்குத் திட்டங்களின் நன்மையை விளக்கி, அவற்றைப் பயன்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் போன்றவை வியக்கத்தக்கவை.


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service