நம் வரலாற்றில் இது ஒரு குழப்பமிக்க தருணம்”

August-15-13

விடுதலைப் பொன்னாளில் உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். உலகெங்கிலும் வாழ்ந்துவரும் பாரத தேசத்தவருக்கு இந்நன்னாளில் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்,

 

இன்றிருக்கும் மக்களில் பெரும்பாலோர் சுதந்திரப் போராட்டத்தை நேரில் கண்டதில்லை. ஏனெனில் அவர்கள் 1947க்குப் பிறகு பிறந்தவர்கள் அல்லது அப்போது மிகவும் சிறு வயதினராக இருந்தவர்கள். அவர்களில் நானும் ஒருவன், ஆனால் விடுதலைப் போராட்டத்தில் நம் விடுதலை வீரர்கள் காட்டிய தைரியம் குறித்த வரலாற்று நிகழ்வுகளைக் கேட்கிறபோது எனக்குப் பெருமையும் பொறுப்புணர்ச்சியும் பொங்கிவருகிறது. இன்று நாம் தேசவிடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்யும் வாய்ப்பைப் பெற்றிருக்கவில்லை. ஆனால் தேசத்தின் மாற்றமும் மறுமலர்ச்சியும் குறித்து நம் முன்னோர்கள் கண்ட கனவை நம் வாழ்நாளில் நனவாக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளோம். இன்று நாம் தேசத்தின் விடுதலைக்காகத் தம் தியாகம் வீணாகாது என்ற உறுதியான நம்பிக்கையுடன் தம் இன்னுயிரை ஈந்த பெருமக்களின் தியாகத்துக்குத் தலைவணங்கி அஞ்சலி செலுத்துகிறோம்.
ஆனால், சமீபத்திய நிகழ்வுகளைப் பார்க்கிற போது மனதில் ஒரு வலியை உணர்கிறேன். துணிவின் உருவான நம் இராணுவ வீரர்கள் தொடர்ந்து எல்லையில் கொல்லப்படுகிறபோதும் கடந்த 9 ஆண்டு கால ஆழ்ந்த நித்திரையில் இருந்து விழித்துக் கொள்ளாதிருக்கிறது நம் அரசு. நம் இராணுவம் என்பது பெருமையும் கம்பீரமும் மிக்க அமைப்பு. அதற்குச் சமீபகாலமாக நடக்கும் நிகழ்வுகள் எந்த ஒரு குடிமகனாலும் ஏற்கமுடியாது. இது உண்மையிலேயே தாங்கொண்ணாத் துயரமிக்க விஷயம்.
தொடரும் கடும் விலையேற்றங்களால் நமது பொருளாதார நிலை ஆறுதலாகக் கூட இல்லை. ரூபாய் டாலருக்கெதிரான மதிப்பில் வீழ்ச்சியில் சாதனை படைக்கிறது. இது எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புகளும் நம்பிக்கையும் கொண்டிருக்கும் ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் உதவிகரமாக இல்லை. உங்கள் வீட்டு இளைஞர்களுக்கு நல்ல வேலை இருக்கிறதா? நம் வரலாற்றில் இது ஒரு குழப்பமிக்க தருணம். தேசத்தின் சூழலில் நம்பிக்கையின்மையும் சோர்வும் கவலையும் நிறைந்திருக்கிறது. இந்நிலையில் நிலவைக் கொண்டுவந்து தருவதாக வாக்களித்தவர்கள் எதையுமே செய்ய இயலாது தத்தளிப்பது குறித்து நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். செயல்பாட்டின் குறியீடுகளாகச் செய்யப்படும் பல செயல்களால் நமக்கு எந்தப் பயனுமில்லை
இன்றைய தேவை முழுமையான செயல்பாடு மட்டுமே. 65 ஆண்டுகளாகப் பல பிரிவினைகள் நம்மை வீழ்த்தி வந்திருக்கின்றன,. அவற்றை மீறி மேலெழுந்து கடைக்கோடி மனிதனின் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கும் சக்திகளை வீழ்த்துவதே நம் லட்சியமாக இருக்க வேண்டும். நம் அரசாங்கத்துக்கு ஒரே மதம் தான் இருக்கவேண்டும். அதுவே பாரதம் முதலில் என்ற மதம். ஒரே ஒரு புனித நூல். அதுவே நம் அரசியல் சாசனம். ஒரே ஒரு பக்தி. அதுவே தேச பக்தி. ஒரே ஒரு சக்தி. அதுவே மக்கள் சக்தி. அரசின் ஒரே ஒரு சடங்கு 125 கோடி மக்களின் நல்வாழ்வுக்கான பணிகளாக இருக்க வேண்டும். அரசின் நன்னடத்தை விதி என்பது “அனைவரும் இணைவோம் அனைவரும் முன்னேறுவோம்” என்பதாக இருக்கவேண்டும். அப்போது மட்டுமே மஹாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர், சர்தார் வல்லபாய் படேல் ஆகியோரின் கனவுகளை நாம் நனவாக்க முடியும்.
ஆகஸ்டு 15, 1947 அன்று விடுதலை பெற்றுச் சுயராஜ்ஜியம் அடைந்ததோடு நம் பணி முடிவடைந்துவிடவில்லை. உயர்வான முன்னேற்றம் காணும் குடியரசின் குடிகளான நாம் நல்லாட்சியைத் தரும் பேரியக்கத்துக்கு ஒளிவிளக்குகளாய்ப் பங்களிப்போம். இப்பொறுப்பின் துவக்கமாக வாக்காளர்களாக நாம் அனைவரும் பதிவு செய்து கொள்வோம். என் இளம் நண்பர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்துகொள்ள நான் ஊக்குவிக்கிறேன். அதோடு நில்லாமல் தம் உற்றார் உறாவினர் சுற்றத்தார் என குறைந்தது 10 பேரையாவது வாக்காளராகப் பதிவு செய்ய அவர்கள் உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படிக்கும் ஒவ்வொரு மாணவர் பெயரும் வாக்களர் பட்டியலில் தவறாது இருக்கும் நிலையை உருவாக்குவோம். பாரத நாட்டின் குடிமக்கள் என்ற பெருமையோடு பதிவு செய்துகொண்ட வாக்காளர்கள் என்ற பெருமையும் நமக்கு இருக்கவேண்டும்.
நிறைவாக, INS சிந்துரக்ஷக் நீமூழ்கிக் கப்பல் துயரச் சம்பவத்தில் உயிர்நீத்த நம் துணிவுமிக்க கடற்படை வீரர்களுக்காக பிரார்த்தித்துக் கொள்கிறேன். அவர்களின் குடும்பத்தின்ருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம் வீரர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும்.
விடுதலைத் திருநாளில் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், வரும் ஆண்டுகளில் நம் நாடு வளார்ச்சிப் பாதையில் புதிய உயர்வுகளை எட்டவேண்டும். என் சுதந்திர தினச் செய்தியின் காணொளியையும் வாக்காளராக நாம் பதிவு செய்து கொள்வதின் அவசியத்தை உணர்த்தும் ஒரு காணொளியையும் நான் இங்கே இணைத்துள்ளேன்.

வந்தே மாதரம். ஜெய் ஹிந்த்

 

 

நரேந்திர மோடி
நன்றி தமிழில் ; அருண் பிரபு

 


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service