நம்மால் முடியும் என்றால் நம்மால் நிச்சயம் முடியும்”

August-12-13

பாஜக தேர்தல் பிரச்சாரக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குஜராத் முதல்வர் நரேந்திரமோடி ஆந்திர மாநிலத் தலைநகர் ஐதராபாத் லால் பகதூர் மைதானத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் பேசினார்.
மாலை 5.08 மணிக்குத் தனது பேச்சைத் தொடங்கினார் மோடி. முன்னதாக தன்னை சந்திக்க மேடையேறிவந்த சுதந்திர போராட்ட தியாகி மற்றும் மூதாட்டி ஆகியோரை வரவேற்ற மோடி, அவர்களிடம் ஆசி பெற்றுக்கொண்டார். பின்னர் தனது பேச்சைத் தொடங்கினார். தனது பேச்சின் தொடக்கத்தில், ஆந்திர மாநிலமக்கள் வளமும், நலமும் பெற்று வாழவேண்டும் என்று தெலுங்கில்பேசி வாழ்த்தி விட்டு பேச்சைத் தொடர்ந்தார் மோடி.

செப்டம்பர் 17ம் தேதி ஆந்திரமக்கள் ஹைதராபாத் தினத்தைக் கொண்டாடுகிறார்கள். அன்றுதான் எனது பிறந்தநாளும் வருகிறது. ஆந்திரமக்கள் தற்போது சந்தித்து வரும் கடினமான பிரச்சினையிலிருந்து மீண்டுவர வெங்கடாசலபதியை நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

டெல்லியில் நடந்துவரும் குடும்ப ஆட்சி, நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி விட்டது. வாக்குவங்கி அரசியலுக்காக நாட்டின் பாதுகாப்பை அவர்கள் பலிகொடுத்து விட்டார்கள். இந்திய அரசு வெளிநாட்டினரை பெருமளவில் நுழைய அனுமதித்துவருகிறது. சீன ஆக்கிரமிப்பு இதற்கு ஒரு உதாரணம். இந்தியி நிலத்தின் பெரும்பகுதியை சீனா ஆக்கிரமித்து வருகிறது. ஜம்மு காஷ்மீரில் இன்று கிஷ்த்வார் செல்வதற்காகப்போன மூத்த தலைவர் அருண்ஜேட்லியை விமான நிலையத்தில் வைத்துக் கைதுசெய்துள்ளனர்.

கிஷ்த்வார் வன்முறைக்கும், எல்லையில் இந்தியப்படையினர் கொல்லப்பட்டதற்கும் மத்திய அரசின் அலட்சியமே காரணம். நமது தேசிய அரசியல்மீது மக்கள் நம்பிக்கை இழந்துபோகும் அளவுக்கு காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது. எல்லைப்பகுதியில், இந்திய வீரர் தலைவெட்டித் துண்டித்துக் கொல்லப்பட்ட போது மீண்டும் இது போன்ற தாக்குதலைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்திய அரசும், காங்கிரஸும் கூறின.

ஆனால் ஐந்து வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் கொன்றுள்ளது. தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடந்துகொண்டுதான் உள்ளன. வாஜ்பாய் அரசு இருந்த போது, சிறியமாநிலங்களை உருவாக்கினார். அதை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். ஆனால் இப்போது அப்படிப்பட்ட நிலைமை இல்லை. சீமாந்திராவும் வளரவேண்டும், முன்னேற வேண்டும். மத்திய அரசு சீமாந்திராவுக்கான தலை நகரை உருவாக்க முயலவேண்டும். 2004ம் ஆண்டு, தெலுங்கானா குறித்த உறுதி மொழியை அளித்தது காங்கிரஸ். ஆந்திராவிலிருந்து அதிக அளவிலான எம்.பிக்களை காங்கிரஸ்பெற்றது. ஆனால் கொடுத்த வாக்குறுதியை அது நிறைவேற்றியதா… இந்திய இளைஞர்கள் இன்று பெரும்கவலையுடன் உள்ளனர். எதிர் காலம் குறித்து அஞ்சுகின்றனர். அவர்களைப்பார்த்து நான் கவலைப்படுகிறேன்.

காங்கிரஸ் ஆட்சி நடந்துவரும் மகாராஷ்டிராவிலும், ஆந்திராவிலும் அதிக அளவிலான தற்கொலைகள் இந்த ஆண்டு நடந்துள்ளன. இந்திய வீரர்களை பாகிஸ்தான் தொடர்ந்து தாக்கிவரும் நிலையில், நமது வீரரை தலையை துண்டித்துக்கொன்ற நேரத்திலும் கூட மத்தியவெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்பாகிஸ்தான் அதிகாரிகளுடன் உட்கார்ந்து மதிய உணவுசாப்பிடுகிறார். பிரியாணி சாப்பிடுகிறார். கேட்டால் சம்பிரதாயம் என்கிறார். நமது வீரர்களின் தலையை வெட்டுகிறவர்களிடம் நாம் ஏன் சம்பிரதாயம் பார்க்கவேண்டும்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மக்களை ஏமாற்றிவிட்டது. மக்கள் அரசு மீது நம்பிக்கையை இழந்துவிட்டனர். பாகிஸ்தானுக்கு நாம் உறுதியான, வலிமையான பதிலைத் தரவேண்டும். இந்திய மக்கள்மீ்து தாக்குதல் நடத்தினால் சரியானபதில் கிடைக்கும் என்பதை அவர்கள் உணரச் செய்யவேண்டும்.

ஆனால் இந்த அரசு மக்களின்பாதுகாப்பை, தேசியப் பாதுகாப்பை உறுதிசெய்யாது. இதற்கு வாக்குவங்கி அரசியல்தான் முக்கியம். இந்தியாவின் பாதுகாப் குறித்து கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறது காங்கிரஸ் அரசு. வங்கதேசத்து எல்லையில் ஊடுறுவல்காரர்களை தடுக்கவேண்டாம் என்று எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சீனத்து ஆக்கிரமிப்பு உலகுக்கேதெரியும். இந்திய சிறைகளில் உள்ள கைதிகளுக்கு அவ்வளவுசீக்கிரம் ஜாமீன் கிடைக்காது.

ஆனால் இந்திய மீனவர்கள் இருவரைக்கொன்ற இத்தாலிய வீரர்களுக்கு உடனடியாக கிடைக்கிறது. இத்தாலிக்கு அவர்கள் தப்பி ஓடுவதை நாம் வேடிக்கைபார்த்தோம். சுப்ரீம் கோர்ட் கொடுத்த நெருக்கடியால்தான் அவர்கள் மீண்டும் திரும்பிவந்தனர். ஆந்திர, தெலுங்கானா மக்கள் நல்லிணக்கத்துடன் வாழவேண்டும். தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ளக்கூடாது.

குஜராத்தில் தெலுங்கர்களும், குஜராத்திகளும் ஒற்றுமையுடன் வாழும் போது, ஏன் ஒரே இனமாகிய நீங்கள் ஒற்றுமையுடன் வாழமுடியாது. உங்களைப் பிரித்துப்பார்க்க நினைக்கிறது காங்கிரஸ். அதற்கு இடம் தந்துவிடாதீர்கள். வளர்ச்சி மட்டுமே முன்னேறிச் செல்வதற்கான ஒரேவழி. ஆனால் அதுகுறித்து ஒருபோதும் காங்கிரஸ் கவலைப்பட்டது கிடையாது. மறைந்த என்.டி.ராமாராவ் காங்கிரஸுக்கு எதிரான சக்திகளை வலுவுடன்திரட்டினார். ஆந்திராவில் காங்கிரஸுக்கு எதிரானசக்திகளை ஓரணியில் நிறுத்தினார். காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க அவர்மேற்கொண்ட முயற்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப்பணத்தை கொண்டு வர வேண்டும் என மூத்த தலைவர் அத்வானி கோரினார். ஆனால் அதைச்செய்ய இந்த அரசு தயாராக இல்லை.

நான் ஒருமுறை பிரதமரிடம்கேட்டேன்… எப்படி உங்களால் இந்திய பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும் என்று. இன்று பொருளாதாரம் வீழ்ந்துகிடக்கிறது. ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு, நாட்டின் நிதியமைச்சரின் வயதுக்கு சமமாக உயர்ந்து நிற்கிறது. வளர்ச்சிப் பாதையில் நடக்க காங்கிரஸ்மறுக்கிறது. மக்கள்கேட்கும் கேள்விகளுக்கு அவர்களால் பதில்தர முடியவில்லை. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, ஏழை எளிய மக்களால் நன்றாக சாப்பிட முடிந்தது. யாரும் உணவுப் பாதுகாப்பு குறித்து சிந்திக்கவே அவசியம் ஏற்படவில்லை. ஆனால் மத்திய பிரதேச பாஜக அரசு உணவுப் பாதுகாப்பு குறித்து பேசியதும் அதை அப்படியே காப்பியடித்து விட்டது மத்திய காங்கிரஸ் அரசு. மத்தியப் பிரதேசத்தைப் பார்த்து மத்திய அரசு மேலும் பல நல்ல திட்டங்களைக் கொண்டு வரட்டும். காங்கிரஸ் அரசு நாட்டுக்கும், மக்களுக்கும் பெரும் சுமையாகி விட்டது.

எங்களைப்பார்த்து திருந்தவோ அல்லது குஜராத்தை பார்த்து திருந்தவோ மத்திய அரசுக்கு மனம் இல்லை என்றால், பக்கத்துமாநிலமான தமிழ்நாட்டை பாருங்கள். அங்கு முதல்வர் ஜெயலலிதா திறன் வளர்ச்சிக்காக செய்துள்ளமுதலீடுகளைப் பாருங்கள். 35 வயதுக்குட்பட்டோர் இந்தியாவில் 65 சதவீதம்பேர் உள்ளனர். அவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பு இல்லை அப்படி இருக்கும் பட்சத்தில் இந்தியாவின் எதிர் காலம் என்னாகும்.. யோசித்துப்பாருங்கள்.

மக்கள் வரிப்பணத்தை வீணடித்து வருகிறது காங்கிரஸ் அரசு. தேர்தல் வரும்போது வாக்குகளை மட்டும் மறக்காமல் பெற்று விட்டு மக்களை ஏமாற்றுகிறது. இன்றைய இளைஞர்களிடம் நல்லதிறமை உள்ளது. ஆனால் வேலைதான் இல்லை. நாட்டை பற்றியும் மக்களை பற்றியும் இந்த அரசு சிந்திக்கவேண்டும். அனைத்துத்தரப்பினரின் வளர்ச்சிகுறித்தும் சிந்திக்கவேண்டும். இன்றைய கூட்டத்தில் பங்கேற்றவர்களிடமிருந்து ரூ. 5 கட்டணம் வசூலித்துப் பெறப்பட்டதொகையானது, உத்தரகாண்ட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண நிதியில் சேர்க்கப்படும். இந்தக்கட்டணம் மூலம் ரூ. 10 லட்சம் வசூலாகியுள்ளது. இதை உத்தரகாண்ட் மக்களுக்கு அளிக்கப் போகிறோம். நம்மால் முடியும் என்றால் நம்மால் நிச்சயம் முடியும். இதை நீங்கள் உரத்துச் சொல்லுங்கள் என்று கூறிய மோடி, ஜெய் தெலுங்கானா, ஜெய் சீமாந்திரா, பாரத் மாதா கி ஜெய், வந்தே மாதரம் என்று கூறி தனது பேச்சை நிறைவு செய்தார்.


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service