தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் சுகாதார திட்டம்”

May-17-13

நமது நாட்டில் பிரசவத்தின்போது தாயோ, குழந்தையோ இறந்துபோவது இன்னும் பல மாநிலங்களில் தொடர்கதையாக இருக்கிறது. அதனைக் கட்டுப்படுத்த, மோடி அரசு ஒரு புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இ-மம்தா என்று பெயரிடப்பட்ட இந்த திட்டம், தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் கர்ப்பிணிகளின் உணவுப் பழக்க வழக்கங்களைக் கண்காணிப்பதோடு, தேவையான மருத்துவ உதவிகளை பேறுகாலத்துக்கு முன்பும், பிரசவத்தின் போதும், பிரசவத்துக்குப் பின்பும் செய்ய முடிகிறது. பிறந்த குழந்தையின் உடல்நலம், பிறந்த நாள்முதல் கண்காணிக்கப்பட்டு, அவை அனைத்தும் இணையம் மூலம் கணினிகளில் பதிவு செய்யப்படுகிறது. இதனால், எப்போது எந்தெந்த மருத்துவ உதவிகள் குழந்தைக்குத் தேவைப்படுகின்றன என்பதை அறிந்து, அனைத்து மருத்துவ உதவிகளையும் அரசால் செய்ய முடிகிறது.

இ-மம்தா திட்டம்:

இந்த இ-மம்தா திட்டத்தின் மூலம், சுமார் 85 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 4 கோடியே 30 லட்சம் மக்களின் உடல்நலம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் இரண்டே ஆண்டுகளில் குஜராத் அரசால் சேகரிக்க முடிந்தது.

2010-ல் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தில் மகத்தான வெற்றியை, மத்திய அரசு பரிசு வழங்கிப் பாராட்டியதோடு, இத்திட்டத்தை நாடு முழுதும் செயல்படுத்த முடிவெடுத்துள்ளது.

இத்திட்டத்தை எப்படிச் செயல்படுத்தினார்கள் என்று பார்ப்போம். முதல் வேலையாக, அனைத்து சுகாதாரப் பணியாளர்களும், கிராமங்களிலும் நகரங்களிலும் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, அந்த வீட்டில் உள்ள அனைவரின் சுகாதாரம் பற்றிய தகவல்களையும் சேகரித்தனர். கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் போன்றோரின் விவரங்களும் இதில் அடங்கும்.

சேகரித்த தகவல்கள் அனைத்தும் சரியானவைதானா, இல்லையா என்பதை, எந்தெந்த வழிகள் உண்டோ, அனைத்தின்மூலமாகவும் சரிபார்க்கப்பட்டன. இதில் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவை பெரியவர்களின் தகவல்களைச் சரிபார்க்கவும், அங்கன்வாடி மற்றும் பள்ளிப் பதிவேடுகள், குழந்தைகள் பற்றிய தகவல்களைச் சரிபார்க்கவும் பயன்படுத்தப்பட்டன.

சுகாதார அடையாள எண்:

இவ்வாறு சேகரித்த தகவல்கள் அனைத்தும் இணையத்தின்மூலம் பதிவு செய்யப்பட்டன. ஒவ்வொருவருக்கும் ஒரு பிரத்தியேக சுகாதார அடையாள எண் உருவாக்கப்பட்டது. இதன்மூலம் ஒருவர் இடம் மாறி எங்கு சென்றாலும் அவரின் சுகாதாரம் பற்றிய தகவல்களை அந்த எண்ணின்மூலம் எளிதாக எடுக்க முடியும்.

சுகாதாரத் தகவல்களைச் சேகரித்து இணையத்தின் உதவியுடன் பதிவு செய்தபிறகு, ஒவ்வொரு சுகாதார மையத்தின் எல்லைக்கு உட்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் பற்றிய விவரம் ஆராயப்படும்.

இந்த மாதத்தில், எந்தெந்தக் கர்ப்பிணிகளுக்கு எத்தகைய மருத்துவ உதவிகள் செய்யவேண்டும், எந்தெந்தக் குழந்தைகளுக்கு எத்தகைய தடுப்பூசியும் மருந்துகளும் கொடுக்கவேண்டும் போன்ற அறிக்கைகள் தயாரிக்கப்படுகின்றன.

அவை, மருத்துவப் பணியாளர்களுக்குக் கொடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் அவர்கள் அந்த மாதத்துக்கான மருத்துவப் பணிகளைச் செய்கிறார்கள்.

 

எஸ்.எம்.எஸ். மூலம் தகவல்:

இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால், குறிப்பிட்ட கர்ப்பிணிக்கு நாளைக்கு குறிப்பிட்ட மருந்து கொடுக்கவேண்டும் என்றால், குறிப்பிட்ட நாளுக்கு முன்பாகவே கர்ப்பிணிக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும், பிளாக் மற்றும் மாவட்ட அளவிலான சுகாதார அதிகாரிகளும் செல்பேசிமூலம் எஸ்.எம்.எஸ் சென்றுவிடுகிறது. இந்தக் குறுஞ்செய்தி குஜராத் மொழியில் செல்வதோடு, படிக்காதவர்களும் பயன்பெறும் வகையில் குரல் ஒலி வழியாகவும் (வாய்ஸ் மெயில்) செல்கிறது.

மருத்துவக் களப் பணியாளர்கள் தேவையான மருத்துவ உதவிகளைத் திட்டமிட்டபடி செய்தபின் அந்தத் தகவல்களை இணையம்மூலம் அந்தக் குறிப்பிட்ட பயனாளியின் சுகாதார அடையாள எண்ணைப் பயன்படுத்திப் பதிவு செய்துவிடுகிறார்.

இதேபோல், குழந்தை பிறந்ததிலிருந்து, குழந்தை சுகாதாரம் பற்றிய அனைத்துத் தகவல்களும் உடனுக்குடன் பதிவு செய்யப்படுகின்றன. இதனால், ஒரு குழந்தையின் முழுமையான சுகாதாரத் தகவல்களை எளிதாகப் பெறுவதோடு, அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை முந்தைய தகவல்களின் அடிப்படையில் வழங்க முடியும்.

இந்தத் திட்டத்தின் மகத்தான வெற்றிக்கு, மருத்துவப் பணியாளர்களின் கடின உழைப்புதான் காரணம். இவர்களை ஊக்கப்படுத்தும்விதமாக, இவர்களின் சேவைகளைக் கண்டறிந்து அவ்வப்போது பரிசுகளும் பதக்கங்களும் வழங்கப்படுகின்றன.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, முன்பெல்லாம் மேலதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புவதற்கு மாதத்துக்கு சுமார் நான்கைந்து நாட்களைச் செலவிட வேண்டியிருந்தது. இப்போது இதனை நொடியில் முடித்துவிட முடிகிறது. இதனால், மருத்துவப் பணியாளர்கள் இப்போது அதிக நேரத்தை மக்களுக்காகச் செலவிட முடிகிறது.

மாநிலம் முழுதும் உள்ள சுகாதாரத் தகவல்கள் ஒரே இடத்தில் இப்போது இருப்பதால், தேவையான தகவல்களை உடனே பெற முடிவதோடு, பலவித ஆராய்ச்சிகளையும் மாநில, மாவட்ட மருத்துவ அதிகாரிகளால் செய்ய முடிகிறது. உண்மையிலேயே, மாநிலத்தின் சுகாதாரம் இப்போது மோடியின் விரல் நுனியில்.

நீண்ட ஆயுள் திட்டம்:

அரசு மருத்துவர்களின் எண்ணிக்கை மக்கள் தொகைக்கு ஈடு கொடுக்கும் வகையில் இல்லை. இதனால் ஏழை எளியவர்களும் தனியார் மருத்துவமனைகளை நாடும் நிலைதான் உள்ளது. குறிப்பாக, பிரசவத்துக்குத் தனியார் மருத்துவமனைக்குச் செல்லும்போது கணிசமான தொகை கட்டணமாகக் கொடுக்கவேண்டிய நிலை உள்ளது.

தனியார் மருத்துவமனைகளையும் அரசின் வழிகாட்டுதலோடு குறைந்த செலவில் பிரசவம் போன்ற சேவைகளுக்கு ஏன் பயன்படுத்தக்கூடாது என்ற புதிய சிந்தனையின் விளைவுதான் மோடி அரசின் ‘சிரஞ்சீவி யோஜனா’ திட்டம். 2005-ல் பரிசோதனை முறையில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், அதன் அபரிதமான வெற்றியை தொடர்ந்து 2007-ல் மொத்தம் உள்ள 26 மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒரு பிரசவத்துக்கு ரூபாய் 1,795 என்று ஆரம்பத்தில் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் அது 2,800 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

பெரிய கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் இருக்கும் பெரும்பான்மையான தனியார் மருத்துவமனைகள் இத்திட்டத்தில் அரசுடன் இணைந்து வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகின்றன.

இ-மமதா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபின், தனியார் மருத்துவமனைகள் மட்டுமின்றி, தனிப்பட்ட மருத்துவர்களும் தாமாகவே நேரடியாக அரசுடன் இணைந்து குஜராத்தில் சுகமான பிரசவத்தை உறுதி செய்து வருகின்றனர்.

இறப்பு விகிதம்:

இந்தியாவில்தான் உலகிலேயே அதிகத் தாய்மார்கள் பிரசவத்தின்போதோ அல்லது பிரசவம் தொடர்பான பிரச்னைகளாலோ இறந்துபோகிறார்கள். உலகில் அப்படி இறக்கும் நான்கு தாய்மார்களில் ஒருவர் இந்தியர்.

அதே காலகட்டத்தில் (2003) குஜராத்தில் பிரசவத்தின்போது தாய்மார்களின் இறப்பு விகிதம் 202 என்று இருந்தது.

இதில் புரிந்துகொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால், பிரசவப் பிரச்னைகளால் தாய் இறந்துவிட்டால், குழந்தை பெரும்பாலும் ஓரிரு ஆண்டுக்குள் இறந்துவிட வாய்ப்புகள் அதிகம்.

குழந்தைகள் இறப்புவிகிதம், (ஆயிரம் பிறந்த குழந்தைகளில்) 57 என்று இருந்தது. இதனைக் கட்டுக்குள் கொண்டுவர மோடி அரசு முடிவு செய்தது. பெரும்பாலான இறப்புகள், பிரசவத்தின் போது தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்காமல் போனதால்தான் என்று அரசு உணர்ந்தது.

அரசு மருத்துவக் கட்டமைப்புகளை உடனடியாக விரிவாக்கம் செய்வது என்பது எளிதல்ல என்பதை உணர்ந்த மோடி, தனியார் மருத்துவமனைகளைக் கொண்டு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க முடிவு செய்தார். விளைவுதான் நாம் மேலே சொன்ன சிரஞ்சீவி யோஜனா திட்டம்.

இலவச பிரசவம்:

இத்திட்டத்தின் படி, அரசு அங்கீகரித்த மருத்துவமனைகளில், வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள கர்ப்பிணிப் பெண்கள் இலவசமாகப் பிரசவம் செய்துகொள்ளலாம்.2007-09-ம் ஆண்டு அகில இந்திய அளவில், பிரசவத்தின்போது கர்ப்பிணிகளின் இறப்பு விகிதம் 212 ஆக இருந்தது. ஆனால் அதே காலகட்டத்தில் குஜராத்தில் இது 148 ஆகக் குறைந்தது.

2012-ம் ஆண்டு மத்தியில், சிரஞ்சீவி திட்டத்தின்மூலம் சுகப்பிரசவம் செய்துகொண்டவர்கள், சுமார் 7 லட்சத்து 60 ஆயிரம் பேர். பணப்பிரச்னையால் வீடுகளிலேயே பிரசவம் செய்து, சரியான மருத்துவ உதவி கிடைக்காமல் மரித்துப் போகும் நிலை போய், இன்று ஏழை, எளிய கர்ப்பிணிகள் மருத்துவமனைகளை நாடிச் சென்று பிரசவம் செய்துகொள்கின்றனர்.

2001-02-ம் ஆண்டுக் கணக்குப்படி குஜராத்தில் மருத்துவமனைகளில் உதவியோடு நடந்த பிரசவம் வெறும் 51.43 சதவீதம் மட்டுமே. 2010-ம் ஆண்டுக் கணக்குப்படி பாதுகாப்பான சுகப் பிரசவம் 91.2 சதவீதமாகவும் மருத்துவமனைகள் மூலம் நடந்த பிரசவம் 79.8 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. இத்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல மாநிலங்கள் இதனைத் தங்கள் மாநிலத்திலும் செயல்படுத்தத் தொடங்கியுள்ளன.


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service