சொர்க்கமாக மாறிய ‘குஜராத் கூவம்’”

May-28-13

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியத் தேவை, அதன் அடிப்படைக் கட்டமைப்புகள் வலுவாக இருப்பது. அதனை மோடியின் குஜராத் எவ்வாறு செயல்படுத்தியுள்ளது என்பதைச் சில எடுத்துக்காட்டுகளைக் கொண்டு பார்ப்போம்.
‘கூவம்’ என்றாலே நமக்கு உடனே நினைவுக்கு வருவது சென்னையில் ஓடும் சாக்கடை ஆறுதான். கூவம் என்பது ஓர் அழகான ஆறாக இருந்தது; அது இன்று மாசுபட்டுக் கிடக்கிறது என்பதுகூடப் பலருக்குத் தெரியாது. குஜராத்தின் அகமதாபாத் நகரில் ஓடும் சபர்மதி நதிகூட நமது கூவம் ஆற்றைப்போன்றே சாக்கடை ஆறாகத்தான் ஓடியது.
ஆரவல்லிப் பள்ளத்தாக்கிலிருந்து பல அணைகளைக் கடந்து அகமதாபாத்துக்கு வரும் இந்த நதி, வருடத்தில் பல மாதங்கள் தண்ணீரே இல்லாமல் கிரிக்கெட் விளையாடும் இடமாகப் பயன்பட்டு வந்தது. நகரின் சாக்கடை நீர் மட்டுமின்றி தொழிற்சாலைக் கழிவுகளை கொட்டும் இடமாகவும் இருந்தது.
அன்றாடம் காய்ச்சிகள், நகர்ப்புற வறுமையைத் தாக்குப்பிடிக்க முடியாமல் இந்நதியின் கரையோரத்தில் கணிசமான அளவு குடியேறியிருந்தனர். எப்போதாவது திடீரென்று நிகழும் வெள்ளப்பெருக்கால், அந்த மக்களும் அவர்களின் உடமைகளும் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாகின.எப்போதாவதுதானே தண்ணீர் வரும் என்பதால் அங்கு வாரச் சந்தையும் கூடியது. எதற்கு வெட்டியாக இடத்தை விட்டுவைப்பது என்று அதனை ஆக்கிரமிக்கும் கூட்டம் வேறு.

8 ஆண்டுகளில் ஜீவநதி:

ஆனால், எட்டே ஆண்டுகளுக்கு உள்ளாக, அந்த நதி அடியோடு மாறிவிட்டது. முன்பு, ஜீவனற்று மெல்ல மெல்லச் செத்துக்கொண்டிருந்த நதி, இப்போது வற்றாத ஜீவநதி ஆகிவிட்டது. 10.6 கி.மீ தூரத்துக்குச் சலசலவென நிற்கும் சுத்தமான நீர், மனத்துக்கு மகிழ்ச்சி ஊட்டுவதோடு நகருக்குப் புதுப் பொலிவையும் கொடுக்கிறது.
நதியின் துர்நாற்றத்தைத் தவிர்க்க மூக்கை மூடிக்கொண்டு சென்றவர்கள் இப்போது, குடும்பத்தோடு சென்று, அங்கு மாலைப் பொழுதையும் விடுமுறை நாட்களையும் கழிக்கிறார்கள். படகு சவாரியும் செய்கின்றனர்.
இந்த ஆச்சரியம் எப்படி நடந்தது?
காந்தி ஆஸ்ரமம்: மேற்கு இந்தியாவில் உள்ள பெரிய நதிகளில் ஒன்று சபர்மதி. இது ராஜஸ்தானில் தோன்றி, வட குஜராத் வழியாக சுமார் 371 கி.மீ தூரம் பயணித்து அரபிக் கடலில் போய் சங்கமிக்கிறது. சபர்மதியின் கரையில்தான், குஜராத்தின் தொழில் நகரமான அகமதாபாத்தும் தலைநகரான காந்திநகரும் அமைந்துள்ளன. மகாத்மா காந்தி, தனது ஆசிரமத்தை இந்நதியின் கரையில்தான் நிறுவினார். சபர்மதி ஆறு உபநதிகளைக் கொண்டுள்ளது. எட்டுக்கும் மேற்பட்ட அணைக்கட்டுகளையும் கொண்டுள்ளது. அகமதாபாத்துக்கு முன்பாக, சுமார் 165 கி.மீ தூரத்தில் தாரோய் அணை கட்டப்பட்டுள்ளது. அந்த அணை எப்போதாவதுதான் திறக்கப்படும் பரிதாப நிலையில் உள்ளதால், அகமதாபாத்தில் சபர்மதி எப்போதும் வறண்டுதான் கிடந்தது. அகமதாபாத்தில் உள்ள அனைத்துத் தொழிற்சாலைகளின் கழிவுகளும் இங்கேதான் கொட்டப்பட்டன. சுமார் 45 லட்சம் மக்கள் தொகையோடு வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் அகமதாபாத்தின் பெரும்பாலான சாக்கடைகளுக்கு வடிகாலாக விளங்கியது சபர்மதி ஆறு.

சீர்‌கெட என்ன காரணம்? :

அகலமான, நீண்ட சபர்மதியின் கரையோரம், கிராமங்களிலிருந்து பிழைப்பு தேடிவரும் மக்களுக்கு வாழ்விடமாக மாறியதில் ஆச்சரியம் ஏதுமில்லை. தண்ணீர் இல்லாத சில பகுதிகள் தொழிற்சாலைகளாகக் கூட மாறியது! இது ஒன்றும் புதிதல்ல, வளர்ச்சியின் பெயரால் எல்லா நகரங்களிலும் நடைபெறும் ஒன்றுதான் இது. மழைக் காலங்களில் நதியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு, அவ்வப்போது அந்நகரைப் பதம்பார்ப்பதும் வாடிக்கையான ஒன்று.
அகமதாபாத்தைக் கிழக்காகவும் மேற்காகவும் பிரிக்கும் இந்த நதியின் நீண்ட பாரம்பரியத்தையும் அதன் கரையோரத்தில் பரந்து கிடக்கும் நிலப்பரப்பையும் பாதுகாக்க எண்ணினார் நரேந்திர மோடி. காலியாகக் கிடக்கும் இந்த நிலப்பரப்பையும் நதியையும், உழைத்துக் களைத்திருக்கும் நகரவாசிகளுக்கான ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மாற்ற அவர் திட்டமிட்டார். இதற்கு முன்பும் இதைப் பலர் கனவு கண்டனர். ஆனால் அவையெல்லாம் கனவாகவே முடிந்துபோயின.

எதிர் வந்த சவால்கள்:

நரேந்திர மோடியின் அரசு, இந்தத் திட்டத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்த உடனேயே பல சவால்கள் முன் வந்து நின்றன.வற்றியே இருக்கும் நதியை எப்படி வற்றாத ஜீவநதி ஆக்குவது? தொழிற்சாலைக் கழிவுகளை ஆற்றில் கலக்க விடக்கூடாது. என்ன மாற்று வழி? நகரத்தின் சாக்கடை நீர் இந்த நதியை மாசுபடுத்துவதைத் தவிர்ப்பது எப்படி?
முடிவாக, அகமதாபாத்தைக் கடந்து செல்லும் சபர்மதியில் 10.6 கிலோமீட்டர் தூரத்துக்கு எப்போதுமே தண்ணீர் கெட்டுப்போகாமல், அளவு மாறாமல் வைப்பதாகத் திட்டமிடப்பட்டது. பல்வேறு அரசுத் துறைகளிலிருந்து இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தத் தேர்வு முழுக்க முழுக்க அவர்கள் கடந்த காலங்களில் செயலாற்றிய விதம் மற்றும் திறமையின் அடிப்படையில் அமைந்தது.
அதேபோல் இத்திட்டத்தை நிறைவேற்ற சுமார் 200 ஹெக்டேர் நிலம் அகமதாபாத் மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

தடுப்புச் சுவர்கள்:

மழைக்காலங்களில், சபர்மதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அது அகமாதாபாத் நகரினுள் புகாமல் இருக்க நதியின் இருபுறமும் பலமான தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தத் திட்டம் முடிந்து திறப்பு விழா நடப்பதற்கு முன்பாகவே, ஆற்றங்கரை ஓரத்தில் இருந்த சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, மாற்று வீடுகள் வழங்கப்பட்டன. அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளில் அவர்கள் குடியமர்த்தப்பட்டனர். அதுவும் அகமதாபாத் மாநகரின் எல்லைக்குள்ளாகவே. கேட்கவா வேண்டும்? உடனேயே அவர்கள் அந்த வீடுகளுக்குக் குடி போய்விட்டனர். அவர்களுக்கு மின்சாரம், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் உடனேயே செய்து தரப்பட்டன.
2012-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி நரேந்திர மோடி, இந்தத் திட்டத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். படகுப் போக்குவரத்தையும் அவர் தொடங்கி வைத்ந்தார். லண்டன், நியூ யார்க், சிங்கப்பூர் மட்டும்தான் நதிகளை நகர மக்களின் வாழ்க்கையோடு இணைந்த பகுதியாக ஆக்க முடியும் என்றில்லை. அகமதாபாத்தும் அதனைச் செய்ய முடியும் என்று நிரூபித்துக் காட்டினார் மோடி.

பொழுதுபோக்கு இடம்:

அகமதாபாத் வாசிகளுக்கு, தற்போது பொழுதுபோக்கு அம்சமாக இது மாறியுள்ளது. தண்ணீர் நதியில் எப்போதுமே நிரம்பியுள்ளதால், நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும் இனி, வெள்ளப் பெருக்கு பற்றிய அபாயமும் இல்லை.
நதியை மையமாகக் கொண்டு, பல சிறிய, பெரிய தொழில்கள் பெருக வாய்ப்புள்ளது.
காலம் காலமாக அகமதாபாத்துக்குக் குடிநீர் வழங்கி வந்த சபர்மதி, இனி என்றுமே தவறாமல் தண்ணீர் வழங்கும் என்ற பெருமிதமான நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன்பெல்லாம், இந்தியாவில் உள்ள கூவம் போன்ற ஆறுகளை எப்படி அழகுபடுத்தலாம் என்பதற்கு முன்மாதிரியான திட்டங்களைப் பார்த்துத் தெரிந்துகொள்வதற்காக வெளிநாடுகளுக்குச் செல்லவேண்டிய நிலை இருந்தது. இப்போது அப்படி அல்ல. குஜராத் சென்று சபர்மதி ஆற்றைப் பார்த்தாலே போதும். பல வெளிநாடுகளுக்கும் இது முன்மாதிரியான திட்டமாக அமைந்துள்ளது.
நகரம் என்றாலே நெருக்கம் நிறைந்ததாக, வாழ வசதிகள் குறைந்ததாக, ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் செல்லக் கடுமையான நேரம் ஆகக்கூடியதாக, ஆனாலும் வேலை வாய்ப்பு காரணமாக அனைவரும் வந்து சேரும் இடமாகவே பார்க்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் மோடியின் குஜராத், நகரங்களும் வாழக்கூடிய தரத்திலாக, நல்ல நதி ஓடக்கூடியதாக, மரங்கள் அடர்ந்ததாக, வசதியான பேருந்துச் சேவை இருக்கக்கூடியதாகச் செய்ய முடியும் என்று காட்டியுள்ளது.
அதேபோல, மொத்த மாநிலத்திலும் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பது, சுற்றுலாவுக்கு ஏற்ற இடமாக மாநிலத்தை மாற்றுவது என்று பல முயற்சிகளிலும் மோடி அரசு இறங்கியுள்ளது. சில மாநிலங்கள், அவற்றின் பாரம்பரியம் பெருமை, அம்மாநிலத்தில் இருக்கும் நூற்றாண்டுகள் பழமையான கோவில்கள், கட்டடங்கள், காடுகள், கடற்கரைகள் ஆகியவை காரணமாக இயல்பாகவே சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. அப்படிப்பட்ட இயற்கையான நிலை இல்லாத நிலையில், மோடியின் குஜராத், அதிக முயற்சி செய்தால்தான் தம் மாநிலத்தாலும் இதனைச் சாதிக்க முடியும் என்பதைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப நடந்துகொள்கிறது.


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service