செப்ட்டம்பர் 13 மாற்றம் வேண்டுவோர்க்கு ஒரு மறக்க முடியாத நாள்”

September-14-13

திரு நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இது மாற்றம் வேண்டுவோர்க்கு ஒரு மறக்கமுடியாத நாள். குஜராத்தில் நடைபெற்ற அத்தனை நன்மைகளும் நமக்கும் நிகழாதா என்று ஏங்கித் தவித்துக் கிடந்த மக்கள் எழுச்சியுடனும் சிரிப்புடனும் கைதட்டி மகிழ்ந்த நாள். இந்த அறிவிப்பு

வருவதற்குள் எத்தனை எத்தனை கேள்விகள், ஊகங்கள், கருத்துக்கள், முடிபுகள்? மோடி வந்தால் சுஷ்மா பிரிவார். ஜெட்லி நகர்வார். ஜோஷி கோபிப்பார். அத்வானி ஆக்ரோஷம் கொள்வார். மிதவாதிகள் மிரள்வர். கட்சி உடையும் என்றெல்லாம் கருத்துக்கள் குவிந்தன. இவை அலசல்களோ, ஆராய்ந்து பார்த்த முடிவுகளோ, ஆரூடங்களோ கூட அல்ல. ஆற்றாமையினால் வெளிப்பட்ட சிலரது உள்ளக்கிடக்கை என்பது அறிவிப்பு வந்தபின் ஊர்ஜிதமானது.

நேற்று மோடி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று செய்தி வெளியானது. உடனே ஊகங்கள் தொடங்கிவிட்டன. தகவலறிந்த வட்டாரங்கள் பலவும் மேற்கோள் காட்டப்பட்டன. ஆனால் இறுதியில் அவையாவுமே தகவல் என்னவென்றறியாத வட்டாரங்களாகவே போயின. இது நடவாது என்று நம்பியிருந்தோர் பலரும் அதிர்ச்சியில் உறைந்து போய்ச் சிலமணி நேரங்கள் பேசவில்லை. இன்று தொலைக்காட்சிகளில் மக்களை நேரடியாகச் சந்தித்து மாமாங்கம் பல கடந்துவிட்ட ‘நிபுணர்கள்’மோடி உயர்த்தப்பட்டதால் உருவாகும் விளைவுகள் குறித்து அலசிக் கொண்டிருக்கிறார்கள். சில சிரிப்பைத் தருகின்றன. சிலவற்றைச் சகிக்கமுடியவில்லை. வெகுசிலவே சற்றே காது கொடுக்கத் தக்கனவாக உள்ளன.

இன்று அத்வானி அவர்களின் வருத்தம் குறித்து கவலை கொள்ளும் பலரும் ஒரு காலத்தில் அவரை மிக மோசமாக விமர்சித்தவர்களே. இன்று மோடி உயர்த்தப்படும் காலம் குறித்து அவர் மாற்றுக் கருத்துக் கொண்டுள்ளார் (எதிர்க்கருத்து அல்ல) என்றபோது “ஐயகோ! மூத்தோரை மதிக்காது போவது நியாயமா?” என்று கூவுகிறார்கள். இங்கே மூத்தவரை அணுகிப் பேசி அவரது கருத்துக்கு மதிப்பளித்து அவரிடம் வாதிட்டு நம் கருத்தை எடுத்துச்சொன்ன பிறகே பொதுவில் அறிவிக்கிறோம். இதுதான் உட்கட்சி ஜனநாயகம்,. நாக்பூரில் முடிவுகள் எடுக்கப்பட்டு தில்லியில் திணிக்கப்படுவதாக மணீஷ் திவாரி வருத்தப்படுவது கேட்டுச் சிரிப்புத்தான் வருகிறது. சற்றே வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால் காங்கிரசின் உட்கட்சி ஜனநாயகம் 1969ல் பெங்களூரு கண்ணாடி மாளிகையில் காங்கிரசோடு சேர்ந்து உடைந்து போனது. அதன் பிறகு 4X3 எத்தனை என்று கேட்டால் மேலிடத்துக்குக் கேட்டிருக்கிறோம், தில்லியில் இருந்து கவர் வந்ததும் மேலிடப் பொறுப்பாளர் பிரித்துப் பார்த்து அறிவிப்பார் என்பதைப் போன்ற கட்சிக் கட்டுப்பாடுகள் காங்கிரசில் வழக்கமாகிவிட்டன.

1969க்குப் பிறகு நாட்டில் ஜனநாயகம் என்பதே கேலிக்கூத்தாக ஆக்கப்பட்டுவிட்டது. சோவியத்தை முழுதாக நம்பவேண்டாம், நாம் நம் சொந்தக் காலில் நிற்போம் என்று முழங்கிய காங்கிரசின் மூத்தோர் மூலையில் தள்ளப்பட்டனர். அவசரநிலைக் கொடுமைகள் ஜனநாயகம் என்ற வார்த்தைக்கே அருகதையற்றவை. தலைவர் வானத்தில் வெள்ளைக் காக்கை பறக்கிறது என்று சொன்னால் “ஆமாங்கய்யா! உஜாலா போட்டுகிட்டு வெள்ளவெளேர்னு பறக்குது” என்று ஒத்து ஊதுவோர் மட்டுமே கட்டுப்பாடானவர்களாகக் கருதப்பட்ட காட்சிகள் நமக்குப் புதிதல்ல. ஏன் அப்படி என்று சற்றே யோசித்தால் புத்திசாலிகள் உடனிருந்தால் தன் நிலை ஆட்டம் காணுமோ என்று அஞ்சிய தலைமை தவிர வேறெந்தக் காரணமும் கிடையாது. ஃபக்ருதீன் அலி அகமது என்ற குடியரசுத் தலைவர் அவசரநிலையின் போது நடந்து கொண்ட விதம் போதுமே இவர்களது ஜனநாயகக் கேலிக்கூத்துக்கு.

ஆனால் சங்க பரிவாரம் அப்படியல்ல. ஒரே தலைவன், ஒரே புத்தகம், ஒரே இயக்கம் என்ற நம் பாரத பாரம்பரியத்துக்கு ஒவ்வாத விஷயங்களை ஒதுக்கிவிட்டு பன்முகத் தன்மை என்ற பாரம்பரியத்தின் அடிப்படையில் இயங்குவது நம் வழக்கம். இது புரியாத பலரும் இத்தகைய செயல்பாடுகளை கட்டுப்பாடின்மை என்று கூறுவது இயல்பே. குடும்பத்தில் ஒரு விஷயத்தைப் பற்றி விவாதிக்கிறார்கள் என்றால் மூத்தவர்கள் ஒரு கருத்தைக் கொண்டிருப்பார்கள். தன் அனுபவத்தின் அடிப்படையில் தன் கருத்தை அவர்கள் வலியுறுத்துவார்கள். அடுத்த தலைமுறையினர் காலப்போக்கிற்கு ஏற்றபடி தம் கருத்தைக் கொண்டிருப்பார்கள். அதற்கடுத்த தலைமுறையைக் கேட்டால் வேறு கருத்து வரும். ஆனால் முடிவு என்று வந்துவிட்டால் குடும்ப நலனை மட்டுமே கருத்தில் கொண்டு முடிவெடுப்பார்கள். தன் கருத்து ஏற்கப்படவில்லை என்று குடும்பத்தில் சிலர் வருத்தத்தில் இருப்பார்கள், ஆனால் எடுத்த முடிவைச் செயல்படுத்த இறங்கும் போது ஆசிவழங்கி ஆலோசனைகளும் சொல்வார்கள்.

அதே போலத்தான் இன்று பாஜகவில் நடந்திருப்பது. ராஜ்நாத் சிங், சிவராஜ் சிங் சவுகான், சுஷில் மோடி உள்ளிட்ட பலரும் நரேந்திர மோடி பிரதமராக முன்னிறுத்த வேண்டும் என்று சொன்னார்கள். முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட மூத்த தலைமுறையினர் அதற்கு முழு ஆசிகள் தந்தார்கள். அத்வானி இப்போது வேண்டாம் என்றார். அவர் பேச்சைக் கேட்க வேண்டுமென்று சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் சொன்னார்கள். இறுதியில் சாதக பாதகங்களை ஆராய்ந்து பார்த்து அனைவரும் ஒன்று கூடி மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்துவிட்டனர். அதவானி சற்றே வருத்தமடைந்தார். என் பேச்சை நீங்கள் கேட்கவில்லை என்று வருந்துகிறேன் என்று ராஜ்நாத் சிங்கிடம் சொன்னார். ஆனால் முடிவை ஏற்பதற்கில்லை என்றோ எதிர்ப்பதாகவோ சொல்லவில்லை. ஆக இது ஒரு சுணக்கம் மட்டுமே. பிரச்சினை அல்ல. மாற்றுக்கருத்தைப் பார்த்தேயிராத ஊடகங்களும் மாற்றுக்கருத்துக்குப் பழக்கமே இல்லாத நிபுணர்களும் சேர்ந்துகொண்டு பின்னடைவு, போட்டி, பூசல், பிளவு என்று தோன்றியதைச் சொல்லி பாஜக வரக்கூடாது என்ற செக்யூலர் வாதத்தை பாஜக வெல்லும் வரையிலேனும் உயர்த்திப் பிடிக்க விழைகிறார்கள்.

இன்றைய நிலையில் நாட்டுக்குத் தேவை ஊழலற்ற, திடச்சித்தமுள்ள, தேசியச் சிந்தனை கொண்ட தலைமை. அதில் மோடி முன்னிலை வகிப்பவர் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை, அத்வானி அவர்கள் உள்பட. ஆனால் செயல்முறையில் சிற்சில மாற்றங்கள் வேறுபாடுகள் இருப்பது இயல்பு. அது இருக்கக் காரணம் பாஜக அறிவார்ந்த பல தலைவர்களைக் கொண்ட ஜனநாயகக் கட்சி. “அஞ்சியஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே” என்று பாரதி பாடியதற்கொப்ப தலைமையின் மனம் கோணாமல் தலையாட்டும் கூட்டமல்ல. கருத்து வேறுபாடுகள் இருப்பினும் ஒற்றுமையாக தேச நலனுக்காக ஒன்றுபடும் பண்பு கொண்டு வேற்றுமையிலும் ஒற்றுமை என்ற தத்துவத்தைச் செயலில் காட்டுவது பாஜகவும் சங்க பரிவாரத்தின் மற்ற அமைப்புகளும் மட்டும் தான்.

இன்றைய ஊடகக் கூச்சல்களுக்குச் செவிமடுத்து வருத்தப்படுவதை விடுத்து பாஜகவினரும் இதர சங்கபரிவார அமைப்பினரும் ஒற்றுமையாய் தேசபக்தர்களின் ஆட்சியை அமைக்கப் பாடுபட வேண்டும். செக்யூலர்வாதிகளின் கூச்சலுக்கு பதிலாக கீழ்வரும் திரைப்படப் பாடல் வரிகள் பொருந்தும்.

பண்பாடு இன்றி பாதகம் செய்யும்..
பணத்தாசையாலே பகைத்திட நினைக்கும்…
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்…
வையகம் இதுதானடா!

நன்றி ; அருண்பிரபு


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service