சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மோடியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்க்கு அவர் அளித்த பதில்களும்”

March-10-14

நாட்டின் பல பகுதிகளில் உள்ள, டீக்கடைகளின் முன் கூடியிருக்கும் பொதுமக்களுடன், ‘வீடியோ கான்பரன்சிங்’ முறை மூலம், மோடி, கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, ‘சாய் பே சர்ச்சா’ என, பெயரிடப்பட்டுள்ளது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு  டில்லியில், பாஜக., தலைமையகத்தின் வெளியே உள்ள டீக்கடையில் அமர்ந்தபடி, நாட்டில், பல்வேறு பகுதிகளில் உள்ள, 1,500 டீக்கடைகளின் முன் திரண்டிருந்த மக்களிடம், மோடி, கலந்துரையாடினார்.

அதில் மோடியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்க்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது குறித்து விளக்குங்களேன்?
பெண்களிடம் பாகுபாடுகாட்டுவது, மிக மோசமான நடவடிக்கை. ஒரேகுடும்பத்தில், ஆண் குழந்தையை ஒரு மாதிரியாகவும், பெண் குழந்தையை ஒருமாதிரியாகவும் நடத்துகின்றனர். இந்தபோக்கை கைவிட வேண்டும். கல்விகற்பது, தொழிலை தேர்வுசெய்வது, திருமணம் ஆகிய விஷயங்களில், சுதந்திரமாக முடிவெடுக்கும் உரிமை, பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டும். இதன் மூலம் தான், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது, சாத்தியமாகும்.

கல்வி அறிவு பெற்றபெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது குறித்து?
ஒரு பெண்கல்வி கற்பது, அவரைச் சார்ந்த, இரண்டு தலைமுறையினர், கல்விகற்றதற்கு சமம். பெண்கள், கட்டாயம் படிக்கவேண்டும். குஜராத்தில், நான், முதல்வராக பதவியேற்றதும், பெண்கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தீவிரமான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன். இதற்காக, குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தகுழுக்கள், கிராமம், கிராமமாக சென்று, ஒவ்வொரு வீட்டிலும், பெண் குழந்தைகளை படிக்க வைப்பது குறித்து, அறிவுறுத்தி வருகிறது.

நம் நாட்டில், பெண்களுக்கு போதியபாதுகாப்பு இல்லையே?
ஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வு உண்டு. எந்த விஷயத்தையும் உறுதியுடன் அணுகினால், அதற்கு தீர்வு காண முடியும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்பது, வெட் கக்கேடான விஷயம். பெண்கள், என்.சி.சி.,யில் சேருவதற்கு ஆர்வம் காட்டவேண்டும். சட்டம் பயில வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு, இவை பெரிதும் உதவும். காங்கிரஸ்  தலைமையிலான மத்திய அரசு, ‘நிர்பயா நிதி’ என்ற பெயரில், 1,000 கோடி ரூபாயை ஒதுக்கியதாக அறிவித்தது. ஆனால், அந்த நிதியிலிருந்து, ஒரு நையாபைசா கூட செலவழிக்கப்படவில்லை.

குஜராத் மாநிலம், கிர்தேசிய வனவிலங்கு சரணாலயத்தில், புலிகளை பாதுகாப்பதற்கு, பெண்கள் பாதுகாப்புபடையினர் பணியமர்த்தப் பட்டுள்ளனரே?
ஆம். அந்த சரணாலயத்தில், சில ஆண்டுகளுக்கு முன், வேட்டைக் காரர்களால், புலிகள் அடிக்கடி கொல்லப்பட்டன. இதை தடுப்பதற்காக, பெண்கள் பாதுகாப்புபடை உருவாக்கப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கு, அனைத்துவிதமான பயிற்சியும் அளிக்கப்பட்டது. தற்போது அவர்கள், வெற்றிகரமாக பணியாற்றுகின்றனர். கிர் சரணாலயத்தின் விளம்பர தூதர்கள், அந்தபெண்கள் தான் என கூறும் அளவுக்கு, இப்போது நிலைமை மாறிவிட்டது.

பெண்களுக்கு பொருளாதார ரீதியாக சுதந்திரம் அளிப்பது, முக்கியத்துவம் வாய்ந்ததா?
பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டுமானால், முதலில், அவர்களுக்கு பொருளாதார ரீதியான சுதந்திரம் அளிக்கவேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், பெண்களுக்கு முக்கியபங்கு உள்ளது. புதிய தொழில்நுட்பங்களை கையாளுவதில், ஆண்களைவிட பெண்கள், ஆர்வமாகவும், வேகமாகவும் உள்ளனர்.

போலீஸ் துறையின் மீது படிந்துள்ள மோசமான இமேஜை, எப்படி மாற்றவேண்டும்?
போலீஸ் துறை எப்படி செயல்படுகிறது என்பதை, பள்ளி குழந்தைகளுக்கு கற்பிக்கவேண்டும். அவர்களை, போலீஸ் ஸ்டேஷன்களுக்கு அழைத்துச் சென்று விளக்கவேண்டும். இதுபோன்ற நடவடிக்கை மூலம், இளைஞர்களுடன், காவல்துறைக்கு நெருக்கத்தை ஏற்படுத்த முடியும். பெண்களை, காவல்துறையில் அதிகம் பணியமர்த்த வேண்டும்.

கிராமப்புறத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த என்ன செய்ய வேண்டும்?
நகர்ப்புறங்களில் மட்டும், வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவது சரியல்ல. கிராமப்புறங்களிலும், வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தவேண்டும். கிராமவளர்ச்சியை புறக்கணித்தால், பெரும்பாதிப்பு ஏற்படும். குடிநீர், கழிப்பறை, சமையலறை என, கிராமப்புறங்களில், எந்த அடிப்படை வசதியும் போதிய அளவில் இல்லை. இதுபோன்ற சிறிய பிரச்னைகளுக்கு தீர்வுகண்டால், பெரிய பிரச்னைகளை கூட, எளிதாக சமாளிக்க முடியும்.

பெண்கள் முன்னேற்றத்தில், உங்களின் பங்களிப்பு என்ன?
குஜராத்தில் உள்ள பெண் குழந்தைகளின் கல்வி நிலை குறித்த கவலை, எனக்கு ஏற்பட்டது. உடனடியாக களத்தில் இறங்கினேன். பல ஆண்டுகளாக, எனக்கு கிடைத்த பரிசுப் பொருட்களை எல்லாம், ஏலம் விட்டேன். இதன் மூலம், 70 கோடி ரூபாய் கிடைத்தது. இந்த நிதியை, பெண் குழந்தைகளின் கல்விக்காக செலவிட கொடுத்துவிட்டேன். தனிப்பட்ட முறையில், பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக, நான் செய்த சிறிய உதவி இது.

கிரண் பேடி (ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி): போலீசாருடன், மாணவர்களை கலந்துரையாடச் செய்வது, சுகாதாரம் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, குற்றங்களை தடுப்பதற்கான திட்டத்தை வகுப்பது, பள்ளிகளில், அரசியல் அமைப்பு போன்ற நிர்வாகத்தை ஏற்படுத்தி, அதை மாணவர்களுக்கு கற்றுத் தருவது போன்ற திட்டங்களை செயல்படுத்தலாமே?

கிரண்ஜி, உங்கள் ஆலோசனைக்கு நன்றி. இந்த விஷயத்தில், குஜராத்தில் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகள் குறித்து, உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 12லிருந்து, 15 மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு, அரசு நிர்வாகம் எப்படி நடக்கிறது என்ற விஷயத்தை கற்றுத்தந்துள்ளோம். குஜராத்தில், பெண்களுக்கு அரசியல் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியும், மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிராமநிர்வாக அதிகாரிகளாக, ஏராளமான இளம்பெண்களை நியமித்துள்ளோம்.

நகர்ப்புற பெண்களின் முன்னேற்றத்துக்கு என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?
நகர்ப்புறமயமாதல் மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது. நகர்ப்புறங்களுக்கு பணியாற்ற வரும் பெண்கள், நமக்கு, நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது, என, தங்கள் மனதுக்குள் நினைத்து, நகர்ப்புற வாழ்க்கைக்கு தயாராக வேண்டும். பெண்களுக்கு, வேலை வாய்புகள் குறித்த, தகவல்கள் தெரிவிக்கப்பட வேண்டும். இதன்மூலம், பெண்கள், எளிதாக வேலை வாய்ப்புகளை பெற முடியும்.

அரசியலில் பெண்களின் பங்கு குறித்து:
பெண்களுக்கு, வெறும் கண் துடைப்புக்காக பதவியோ, வாய்ப்போ வழங்க கூடாது. ஆண்களுக்கு அரசியலில், எவ்வளவு அதிகாரம் அளிக்கப்படுகிறதோ, அதே மாதிரியான அதிகாரம், பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது, அதில் பெண்களின் பங்கும் இருக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் இல்லாமல், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது என்பது, சாத்தியமாகாது. ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும், இதற்கான நடவடிக்கைகள் துவங்கப்பட வேண்டும்.

உங்களின் லட்சியம்?
வரும், 2022ம் ஆண்டுடன், நாடு சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகள் ஆகிவிடும். அதற்குள், நாட்டில் உள்ள, அனைத்து மக்களுக்கும், குடிநீர், வீடு, பள்ளி, மின்சாரம், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும், எளிதாக கிடைக்கச் செய்ய வேண்டும். இது, என் லட்சியம் மட்டுமல்ல; கனவும் கூட.இவ்வாறு மோடி, தன்,  டீக்கடை விவாதித்தில் பேசினார்.


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service