குஜராத் போல் இந்தியா மாறவேண்டுமா?”


குஜராத்திலும் சரி, வெளி மாநிலங்களிலும்சரி, பெரும்பாலும் எல்லோருமே சில கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். இதே அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் பல்வேறு முதலமைச்சர்களின்கீழ் வேலை செய்துள்ளனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக மட்டும் எப்படி அவர்களால் திட்டங்களைத் திட்டமிட்ட சமயத்திலோ அல்லது முன்னதாகவோ முடிக்க முடிகிறது? எப்படி அவர்களால் லஞ்சம் வாங்காமல் பணியாற்ற முடிகிறது? எப்படிப் புதிய புதிய முயற்சிகளைச் செய்துபார்க்க முடிகிறது? ரிஸ்க் எடுக்கும் தைரியம் எப்படி வந்துள்ளது? எப்படி அவர்களுக்குள், முன்னேறிய நாடுகளுடன் போட்டி போடும் திறன் வந்தது? அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரே பதில், நரேந்திர மோடி என்பவரின் தன்னிகரற்ற தலைமை என்பதுதான்.

 

சிந்தனை முகாம்:

வெற்றிகரமாகப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்கான காரணங்களில் ஒன்றாக, மோடியின் கலந்தாலோசிக்கும் பண்பு கருதப்படுகிறது.

அதற்கு ஆதாரமாக, நரேந்திர மோடி ஆண்டுதோறும் நடத்தும் சிந்தனை முகாமை (சிந்தன் ஷிபிர்) சொல்லலாம். இந்த மூன்று நாள் முகாமில், நரேந்திர மோடி உள்பட அனைத்து அமைச்சர்களும், அரசின் உயர் அதிகாரிகளும், கலெக்டர்களும், மாவட்ட டெவலெப்மெண்ட் அதிகாரிகளுமாக சுமார் 200 பேர் கலந்துகொள்கின்றனர். இந்த முகாம் பொதுவாக நகருக்கு வெளியே அமைதியான சூழலில் நடைபெறுகிறது. யோகா மற்றும் தியானப் பயிற்சியோடு ஆரம்பிக்கும் இந்தப் பயிற்சி முகாமில் மோடியும் மற்ற அதிகாரிகளோடு சேர்ந்து இந்தப் பயிற்சிகளில் ஈடுபடுகிறார்.
இந்த முகாமில் முக்கியமாக, கடந்த ஆண்டின் வெற்றி, தோல்விகள் அலசப்படுகின்றன. மாநிலத்தின் முக்கிய நிர்வாகிகள் இதில் பங்கேற்பதால், படிப்பினைகளைப் பறிமாறிக்கொள்ளும் தளமாக இது விளங்குகிறது.
மேலும், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்ற வேறுபாடு இன்றி அனைவரும் மக்களுக்குச் சேவை செய்வதற்குத்தான் திரண்டுள்ளோம் என்ற உறுதி நிலை நாட்டப்படுகிறது.
இந்த முகாமில், தற்போது மாநிலத்தில் என்னென்ன பிரச்னைகள் உள்ளன, எந்தப் பிரச்னை உடனடியாகத் தீர்க்கப்படவேண்டும், எந்தெந்தத் திட்டங்களை வரும் ஆண்டில் செயல்படுத்தலாம், அவற்றைச் செயல்படுத்துவதில் என்னென்ன சவால்கள் உள்ளன, அவற்றை எதிர்கொள்வது எப்படி போன்றவை மிக ஆழமாக விவாதிக்கப்படுகின்றன.
இந்த விவாதங்களின் அடிப்படையில், வரும் ஆண்டுக்கான குறிக்கோள், துறைவாரியாக எட்டப்படுகிறது.
இத்தகைய அணுகுமுறை, மோடியின் வெற்றிக்கு மிக அடிப்படையான காரணம் ஆகும். யார் யார் திட்டத்தைச் செயல்படுத்தப் போகிறார்களோ அவர்களைத் திட்டமிடலிலும் சுதந்தரமாக ஈடுபட வைப்பதன் மூலம் அவர்களின் சாதிக்கும் உணர்வை மோடி தூண்டிவிடுகிறார். வருடாந்திர ‘கன்யா கேலவாணி’ நிகழ்ச்சியின்போது பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பக் கோரி குஜராத்தின் கிராமங்களுக்கு நூற்றுக்கணக்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் எவ்விதம் செல்கிறார்கள்? அவர்களுக்கு அந்த உணர்வு எவ்விதம் வந்தது? சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்று இது.
சிந்தனைப் பயிற்சி முகாமில், மிக முக்கியமாக மோடி, தனது கனவை, லட்சியத்தை நேரடியாக அதனைச் செயல்படுத்தப் போகும் அதிகாரிகளோடு பகிர்ந்துகொள்வதோடு, அவர்களது சந்தேகங்களைத் தீர்த்து, அனைவரையும் ஒரே லட்சியமான முன்னேறிய குஜராத்தை நோக்கி அழைத்துச் செல்கிறார்.
இது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் காணமுடியாத ஒன்று.

இடமாற்றம்:

இன்னுமொரு வித்தியாசம், அரசு அதிகாரிகளின் ‘இடமாற்றம்’ என்பது தண்டனையாகவோ அல்லது ஆயுதமாகவோ குஜராத்தில் பயன்படுத்தப்படுவதில்லை.

அதிகாரிகளுக்கு அவர்கள் குறிக்கோளை அடையத் தகுந்த கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் அவர்கள் ஒரே பொறுப்பில் இருப்பதால், அரசும், அந்த அதிகாரியும் நினைத்த நல்ல மாற்றங்களைக் கொண்டுவர முடிகிறது.
குஜராத்தில் நான் சுற்றுப்பயணம் செய்தபோது, பல தென்னிந்திய, குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளைப் பார்க்க முடிந்தது. பலர் அங்கே பத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளாகப் பணியாற்றி வருபவர்கள். சுதந்தரமாக, அரசியல் கலப்பில்லாமல் மக்களின் முன்னேற்றத்துக்காக மட்டுமே செயல்படும் சூழ்நிலை உள்ளதால், அவர்கள் கால நேரங்களைப் பற்றிக் கவலைப்படாமல், குறிக்கோளை நோக்கித் திடமாக முன்னேறுகிறார்கள்.
கடந்த 9 ஆண்டுகளில், மாநிலக் கல்வித்துறை வெறும் மூன்று செயலர்களை மட்டுமே கண்டுள்ளது. மற்ற மாநிலங்களில் ஆண்டுக்கு ஆண்டு புதுச் செயலளர்களைப் பார்க்கும் நிலைதான் உள்ளது. அகமதாபாத் மாநகராட்சியின் ஓர் உயரதிகாரியிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர், ‘நாங்கள் எல்லாம் அரசு அதிகாரிகள் அல்லர், செயல் வீரர்கள்’ என்று சொன்னார். பல்வேறு கடினமான திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருந்த போதும் கூட அவரிடம் காணப்பட்ட உறுதித்தன்மை, நம்பிக்கை போன்றவை, ஓர் அரசு அதிகாரியுடன் பேசும் உணர்வைக் கொடுக்காமல், வேகமாக முன்னேறிவரும் ஓர் இளம் தொழிலதிபரிடம் பேசியது போன்றே இருந்தது. ஒரு சிறந்த தேசப் பற்று மிக்க தலைவரிடம் பேசியது போன்ற உணர்வையும் அது ஏற்படுத்தியது.

கர்மயோகி பயிற்சி:

2004-ம் ஆண்டிலிருந்து கிளாஸ் 1 மற்றும் கிளாஸ் 2அரசு அதிகாரிகளுக்கு ‘கர்மயோகி பயிற்சி’ கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி முகாமில், அரசு அதிகாரிகளும் ஆசிரியர்களும் கலந்துகொள்கின்றனர். இதன்மூலம் அவர்களுக்குத் தங்கள் வேலையைச் சிறப்பாகச் செய்யப் பயிற்சி அளிக்கப்படுகிறது.இதில் மாநிலத்தில் உள்ள 2.25 லட்சம் அரசு ஊழியர்கள் கலந்துகொள்கின்றனர். இந்தப் பயிற்சி முகாம், அரசு அதிகாரிகளை, மக்களை நோக்கிச் சென்று, மக்கள் பணியாற்றச் செய்துவருகிறது என்றால் மிகையல்ல.

மக்களுக்கு மக்களைக் கொண்டு தொண்டு செய்:

மோடி அரசின் மிக அடிப்படைச் சித்தாந்தமான, ‘மக்களுக்கு மக்களைக் கொண்டு தொண்டு செய்’ என்பதை அவருடைய எல்லாத் திட்டங்களிலும் காணமுடிகிறது. மக்கள், எந்தத் திட்டத்தையும் தங்கள் திட்டமாகப் பார்க்கவேண்டும். தங்கள் கனவு நனவாகப் போவதுபோல் எண்ணி, தங்களின் பங்களிப்பை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடுக்கவேண்டும். அது தங்கள் திட்டம்தான், அதற்குச் செயல் வடிவம் கொடுக்க அரசு உதவி மட்டுமே செய்கிறது என்ற வகையில்தான் அவர்கள் சிந்திக்கவேண்டும்.

அதனால் தான், எந்தத் திட்டத்தையும் ஆரம்பிக்கும்போது, வெறும் அறிவிப்பு அல்லது நிதி ஒதுக்கீட்டோடு மட்டும் நின்றுவிடாமல், பல மட்டங்களிலும் அந்தத் திட்டம் குறித்து விவாதிக்கப்படுகிறது. இத்தகைய நடவடிக்கைகளில் அரசியல்வாதிகளின் பங்களிப்பு மிகக் குறைவாக இருந்தாலும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பயனாளிகள் மன்றங்கள் ஆகியோரின் பங்களிப்பு, அரசு அதிகாரிகளின் கடும் உழைப்பு ஆகியவை மிகுதியாக இருக்கின்றன.
நான் குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது, பொதுவாக எந்தத் திட்டத்தைப் பற்றிப் பேசினாலும், எல்லாருமே, ‘இது நரேந்திர மோடியின் கனவுத் திட்டம். இத்திட்டத்தின் முன்னேற்றத்தை அவர் நேரடியாகக் கண்காணிக்கிறார். இத்திட்டத்தைக் குறிப்பிட்ட தேதிக்குள் முடித்தாகவேண்டும். அதற்குத் தேவைப்படும் எந்த உதவிகளையும் மோடி செய்வார்’ என்பதாகும்.
இது, அவர் மக்களின் கனவைத் தன் கனவாக்கி, அவர்களைக் கொண்டே அதை நனவாக்குவதைத் தெள்ளத்தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.குஜராத்தில் நடைபெற்றுள்ள மாற்றங்கள் ஒரே நாளில் நடந்துவிடவில்லை. மெதுவாக, கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நடைபெற்றன. ஆனால், அனைத்தும் திட்டமிட்டபடி, ஒன்றன்பின் ஒன்றாக, மிகச் சரியாக நடைபெற்றுள்ளன. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு முழுமையான, ஒத்திசைந்த வளர்ச்சியாக அது உள்ளது. உலகமே வியக்கத்தக்க வளர்ச்சியாகவும் அது உள்ளது.இதற்குக் காரணம் ஒன்றுதான். நரேந்திர மோடி என்ற நபரின் ஈடு இணையற்ற தலைமைத்துவப் பண்பு.
இந்தியாவின் கலங்கரை விளக்கமாக குஜராத் மாநிலம் திகழ்கிறது. பல அறிவுரைகளுக்கும் செயல் விளக்கங்களுக்கும் அயல் நாடு செல்லும் காலம் போய், இப்போதெல்லாம் மற்ற மாநில அரசுகள் குஜராத் நோக்கிச் செல்கின்றன.
மகாத்மா காந்தியைபோல இந்தியாவின் இதயத்தைப் புரிந்துகொண்டு மக்களுக்காகத் தொண்டாற்றும் பொறுப்பும் கடமையும் உள்ள ஒருவரை, வல்லபபாய் பட்டேலைப் போன்ற எடுத்த காரியங்களை எத்தகைய சவால்களையும் தாண்டி முடிக்ககூடிய வல்லமை கொண்ட ஒரு தலைவரை இந்தியா தேடிக்கொண்டிருக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் தரையில் கால் வைத்துக்கொண்டு, அதே நேரம் மிகப்பெரிய கனவுகளையும் நனவாக்கிக்கொண்டிருக்கும் நரேந்திர மோடியால்தான் இந்தியர்களின் இந்தக் கனவையும் நனவாக்க முடியும்.


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service