குஜராத்தில் மனிதவள மேம்பாடு”

June-10-13

ஒரு மாநிலத்தில் தொழில் வளர்ச்சி ஏற்பட, மனித வளம் சிறப்பாக இருக்கவேண்டும். மேலும் வளர்ச்சி என்றால், அது பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, மக்கள் மன நிறைவோடு மகிழ்ச்சியாக வாழவேண்டும். சமூகங்களுக்கு இடையே சண்டை சச்சரவுகள் இல்லாமல் மாநிலமே அமைதியாக இருக்கவேண்டும். குஜராத்தில் இது தொடர்பாக என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

 

திறமைசாலி இளைஞர்களும் அரசும்:

தற்போது, பொதுவாக திறமைசாலிகள் அனைவரும் அரசாங்கத்தைவிடத் தனியார் நிறுவனங்களையே நாடிச் செல்லும் நிலை உள்ளது. தனியார் நிறுவனங்களில் சில காலம் பணியாற்றியபின் அவர்களில் சிலருக்கு அரசுப் பணிகள்மீது நாட்டம் ஏற்பட்டு, அரசின் திட்டங்களின்மூலம் மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற அவா எழுந்தால், அதற்கான வாய்ப்புகள் இன்றைய அரசு அமைப்பில் பெரும்பாலும் இல்லை என்று சொல்லலாம்.

தங்களின் கனவுத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கோ, தங்களின் பல்வேறு திட்டங்களை எவ்வாறு இன்னும் சிறப்பாகச் செயல்படுத்தலாம் என்று ஆராய்ந்து சொல்வதற்கோ அல்லது குறிப்பிட்ட திட்டம் எந்த அளவுக்கு மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது, திட்டத்தின் பயன் பயனாளிகளுக்குச் சென்று சேர்கிறதா போன்றவற்றை அரசியல் கலப்பு இல்லாமல், உண்மையாக அறிவதற்கு, சமூகப் பணிகளில் ஆர்வமுள்ள இளைஞர்களைப் பயன்படுத்திக்கொள்ளவும் பொதுவாக இந்தியாவில் வாய்ப்புகள் இல்லை.

ஆனால், மோடியின் அரசு, இத்தகை சமூகப் பற்றுள்ள, படித்த, அனுபவம் வாய்ந்த இளைஞர்களுக்கு குஜராத் அரசில் 11 மாத காலத்துக்குப் பணியாற்றுவதற்கு வாய்ப்பு கொடுக்கிறது. இந்த அவகாசத்தில் குஜராத் அரசு இயந்திரம் எவ்வாறு வேகமாகச் செயல்படுகிறது, திட்டங்களைச் செயல்படுத்தும்போது என்னென்ன சிக்கல்கள் வருகின்றன, அவற்றை எவ்வாறு கையாள்கிறார்கள் போன்ற விவரங்களை அறிந்துகொள்ள முடியும்.

 

மாநிலத்தின் அமைதிச் சூழல்:

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு, அமைதியான சூழல் மிக அடிப்படைத் தேவை. மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு குஜராத்தில் ஏறக்குறைய எந்த மதத் திருவிழா நடந்தாலும் பிரச்னைதான். ஊரடங்கு உத்தரவு என்பது மக்களுக்கு மிகப் பழக்கப்பட்ட ஒன்று.

பிப்ரவரி 2002-ல், கோத்ரா நயில் நிலையத்தில் அயோத்தி சென்று திரும்பிக்கொண்டிருந்த ராம பக்தர்கள் இருந்த ரயில் பெட்டி ஒன்று தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. தொடர்ந்து, குஜராத் முழுவதும் மதக் கலவரம் வெடித்தது. அதில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் மாண்டனர். அதனைத் தொடர்ந்து நரேந்திர மோடி பதவி விலகவேண்டும் என்ற குரல்கள் நாடு முழுதும் எழுந்தன. மோடி பதவி விலகி, தேர்தலைச் சந்தித்தார்.

தேர்தலில் மிகப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றிய நரேந்திர மோடிக்கு அமைதியான குஜராத்தை உறுதி செய்வது அடிப்படைக் கொள்கையாக இருந்தது.

2012-ம் ஆண்டுக் கணக்குப்படி, கடந்த 10 ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு (144) எந்தப் பகுதியிலும் பிறப்பிக்கப்படவில்லை. பிரச்னைகளை உடனே அணுகித் தீர்வு காண்பதால் இது சாத்தியமாகியுள்ளது. ஒரு வருடமாவது இந்தியாவில் ஊரடங்கு உத்தரவே பிறப்பிக்கப்படாத மாநிலம் ஒன்று இருக்கிறதா என்பது சந்தேகம்தான்!

மாநிலத்தின் அமைதிச் சூழல், வளர்ச்சிப் பணிகளில் மக்கள் கவனம் செல்வதற்கு உதவியதோடு, அவர்களின் உற்பத்தித் திறனையும் அதிகரித்துள்ளது. மாநிலத்தின் அமைதி, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்க உதவியதோடு, மாநிலத்தின் தொழில் வளர்ச்சியையும் முன்னெடுத்துச் செல்ல உதவியுள்ளது.

 

பிற்படுத்தப்பட்ட தாலுகாக்களுக்குச் சிறப்புக் கவனம்:

2004-ல், குஜராத்தின் 30 தாலுகாக்கள், பின்தங்கியவை என்று கண்டறியப்பட்டன. அவற்றோடு மேலும் 11 தாலுகாக்களும் பிந்தங்கியவை என்று பின்னர் சேர்த்துக்கொள்ளப்பட்டன.

இந்தத் தாலுகாக்களை மாநில அரசின் செயலர் மட்டத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் தாங்களே முன்வந்து தத்தெடுத்துக்கொண்டுள்ளனர். அதன் நோக்கம், ஒவ்வொரு தாலுகாவின் பிரச்னைகளையும் நன்கு ஆராய்ந்து, அதனை முன்னேற்றுவதற்கான திட்டங்களை வகுத்து, குறிப்பிட்ட காலத்துக்குள் அவற்றையும் பிற தாலுகாக்களைப் போன்று முன்னேற்றுவது ஆகும்.

இதற்காக மோடி அரசு அந்த அதிகாரிகளுக்கு ஒவ்வொரு தாலுகாவுக்கும் ஆண்டுக்கு இரண்டு கோடி ரூபாயை வழங்கியுள்ளது. அவர்கள் அதனைப் பல முன்னேற்றத் திட்டங்களுக்கும் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது.

இந்த அதிகாரிகள் மூத்த அதிகாரிகளாக இருப்பதால், அவர்களால் அரசின் கொள்கைகளில் வேண்டிய தாக்கங்களை ஏற்படுத்தி, தங்கள் அரவணைப்பில் உள்ள தாலுகாவை முன்னேற்றப் பாதையில் நடத்திச் செல்ல முடிகிறது.

இந்த அதிகாரிகளின் தனிப்பட்ட கவனம் கல்வி, சுகாதாரம், தண்ணீர் வழங்கல், இளைஞர்களின் திறமைகளை வளர்த்தல் போன்றவற்றை நோக்கி உள்ளன. இந்த அடிப்படைக் காரணிகளை முன்னேற்றினால், மிக விரைவில் அந்தத் தாலுகாக்களும் முன்னேறுவது சாத்தியமான ஒன்றாகும்.

 

குழந்தைகள் உலகம்:

குழந்தைகள் இந்த நாட்டின் செல்வங்கள். அவர்கள் சிறுவயதில் என்னென்ன விஷயங்களைத் தெரிந்துகொள்கிறார்களோ, அவைதான் அவர்களின் வாழ்க்கையின் அஸ்திவாரமாக அமைகிறது. எனவேதான் குழந்தைகளின் பொழுதுபோக்கு அம்சங்கள், அவர்களை மகிழ்விப்பதாக இருக்கவேண்டும்; அதோடு அவர்களுக்குப் பயிற்சி பட்டறையாகவும் இருக்கவேண்டும் என்று நரேந்திர மோடி விரும்பினார்.

இதன் விளைவாக உருவானதுதான் ‘கங்காரியா குழந்தைகள் நகரம்’. மற்ற குழந்தைகள் பூங்கா அனைத்துமே பெரும்பாலும் பொழுதுபோக்கு அம்சங்களை மட்டுமே கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் கங்காரியா குழந்தைகள் நகரம் அப்படிப்பட்டதல்ல.

நாம் எல்லோருமே ஐஸ்கீரிம் சாப்பிடுவோம். ஆனால் அது எப்படித் தயாரிக்கப்படுகிறது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. ஆனால், குழந்தைகளே ஐஸ்கிரீம் தயாரித்து மற்றவர்களுக்குச் சாப்பிடக் கொடுத்தால் எப்படி இருக்கும்?

கங்காரியா குழந்தைகள் நகரில் இதுதான் நடக்கிறது.

 

சேமிக்கும் பழக்கம்:

இதுபோன்றே ஒவ்வொரு அரசு அலுவலகமும் எப்படிச் செயல்படுகிறது என்பதைச் செயல் விளக்கம் மூலமாகக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார்கள். ஒரு வங்கி எப்படிச் செயல்படுகிறது என்பதையும் செயல் விளக்கமாகக் காண்பிக்கிறார்கள். எப்படி வங்கிக் கணக்கு தொடங்குவது, எப்படி வங்கிக்குச் சென்று பணம் கட்டுவது போன்றவை ‘மாதிரி வங்கி’ மூலம் செய்துகாட்டப்படுகின்றன. இதன்மூலம் குழந்தைகளுக்கு சேமிக்கும் எண்ணம் விதைக்கப்படுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக வருமான வரி அலுவலக மாதிரி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அரசின் வரிப்பணம் எவ்வாறு வசூலிக்கப்படுகிறது, எவ்வாறு செலவிடப்படுகிறது உள்பட பல அம்சங்கள் விளக்கப்படுகின்றன. இதனுள் நுழையும் ஒவ்வொரு குழந்தையின் மனத்திலும் வருமான வரியைத் தவறாமல் செலுத்தவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதோடு தங்களின் பெற்றோர் வருமான வரியை முறையாகக் கட்டிவருகின்றனரா என்று கேட்கவும் தொடங்குகிறது.

அதாவது, பொறுப்புள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்கும் முயற்சி இங்கிருந்தேதான் தொடங்குகிறது.

இங்கு அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மாதிரி அலுவலகத்துக்குள்ளும் நுழையும் குழந்தைகள் மனத்திலும், அந்தந்தத் துறை சார்ந்த செயல்பாடுகள், அந்தத் துறைகளின் முக்கியத்துவம் போன்றவை இயல்பாகவே பதிந்துவிடுகின்றன.

எதிர்கால லட்சியமாக எந்தத் துறையைத் தேர்வு செய்யலாம் என்பது அந்தக் குழந்தையின் மனத்தில் துளிர்விடும் இடமாகவும் இது அமைகிறது.

 

மோடியுடன் நேருக்கு நேர்:

இந்தக் குழந்தைகள் நகரில் நுழைந்து ஒவ்வொரு பகுதிக்கும் சென்றுவிட்டு, கடைசியாக நுழையும் அரங்கம், குழந்தைகளை மட்டுமல்ல, அவர்களின் பெற்றோர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. ஆமாம். இங்குதான் முதல்வர் நரேந்திர மோடியுடன் குழந்தைகள் நேரடியாகக் கேள்விகளைக் கேட்கின்றன. அவற்றுக்கு, அந்தக் குழந்தை அமர்ந்திருக்கும் இருக்கையின் எதிரே அமர்ந்திருக்கும் நரேந்திர மோடி பதில் சொல்கிறார்.

அப்படித்தான் திரையில் தெரிகிறது.

ஸ்டூடியோவினுள் நுழையும் குழந்தை அங்குள்ள இருக்கையில் அமர்கிறது. அந்தக் குழந்தை மூன்று கேள்விகளைக் கேட்க அனுமதிக்கப்படுகிறது. குழந்தைகள் கேட்கும் இது போன்ற கேள்விகளுக்கு, ஏற்கெனவே நரேந்திர மோடி வழங்கிய பதில்களைத் தயாராக வைத்துள்ளனர்.

இப்போது ஒரு குழந்தை மூன்று கேள்விகளைக் கேட்டதும், அதற்காக நரேந்திர மோடி ஏற்கெனவே அளித்த பதில்களிலிருந்து தேர்வு செய்து அவற்றை நவீனத் தொழில்நுட்ப முறையில் இணைத்து, குழந்தையுடன் நரேந்திர மோடி நேரடியாகப் பேசுவதுபோலத் திரையில் தோன்றும்படிச் செய்கின்றனர். குழந்தை மட்டுமே ஸ்டூடியோவில் அமர்ந்திருக்கும். ஆனால் திரையில் நரேந்திர மோடியுடன் அந்தக் குழந்தை உரையாடிக்கொண்டிருப்பதாகக் காட்சிகள் ஓடும்.

அதோடு இந்தக் கேள்வி பதில் காட்சிகளை டிவிடியில் பதிவு செய்தும் கொடுக்கின்றனர். நரேந்திர மோடியுடன் குழந்தை பேட்டி கண்ட காட்சிகளை வீட்டில் போய் போட்டுப் பார்க்கலாம். இதன் மூலம் மோடி, சிறு குழந்தைகளும் எளிதில் தொடர்பு கொள்ளும் எளிய மனிதராகத் தோன்றுகிறார். மொத்தக் குடும்பத்தினரின் மகிழ்ச்சியோடு, பொறுப்பான எதிர்காலத்துக்கு எளிதாக வித்திடப்படுகிறது.


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service