குஜராத்தில் தொழில் வளர்ச்சி”

June-3-13

நரேந்திர மோடி அரசின் லஞ்சம் லாவண்யம் அற்ற நேர்மையே உலக முதலீட்டாளர்கள் குஜராத்தில் முதலீடு செய்வதற்கு முக்கியக் காரணம். முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகமாவது மோடியின்மீதான நம்பிக்கை வலுப்பெறுவதையே காட்டுகிறது.
குஜராத்தில் தொழில் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். டாடா நானோ உற்பத்தி மேற்கு வங்கத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த போது, பாதுகாப்பான இடத்தை குஜராத்தில் கொடுத்து, திட்டமிட்டப்படி நானோ காரை வெளிக்கொண்டுவர மோடியின் அரசு டாடாவுக்கு உதவியது.
பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்ல சிறு, குறு நிறுவனங்களுக்கும் தேவையான நிலங்களை, மிக வேகமாக எவ்விதப் பிரச்னையும் இன்றி ஒதுக்கிக் கொடுத்தல் கூட, தொழில் முதலீடுகளை மாநிலத்துக்குக் கவர்ந்து இழுக்கும் முக்கியக் காரணிகளில் ஒன்று.
இந்தியாவிலேயே குஜராத் மாநிலம் மட்டும்தான் நிலம் கையகப்படுத்தலைக் கச்சிதமாக முடிப்பதில் சிறந்து விளங்குகிறது என்று சொல்லலாம். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, இது சம்பந்தமாக எவ்விதப் பிரச்னையும் மோடி ஆட்சியின்போது நிகழவில்லை என்றே கூறலாம். இதற்கு முக்கியக் காரணம், மோடி அரசின் நிலக் கையகப்படுத்தல் கொள்கை என்றே கூறலாம். 2010-ல் உருவாக்கப்பட்ட ‘புதிய தொழிற்பேட்டை உருவாக்கத்தில் பங்கெடுத்துக்கொள்ளும் கொள்கை’ இதனை உறுதிப்படுத்துகிறது.
அப்படி அந்தக் கொள்கையில் என்னதான் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
இந்தக் கொள்கையின் அடிநாதமே, நில உரிமையாளர்கள் மற்றும் கிராம மக்களின் பங்களிப்போடு தொழிற்பேட்டைகளை உருவாக்குவது. பிரச்னை எப்போது வெடிக்கிறது? அந்தப் பகுதி மக்கள் பங்களிக்க முடியாத, நேரடியாகப் பயன்பெற முடியாத அல்லது அவர்கள் வாழ்வாதாரத்தை அழிக்ககூடிய வகையில் புதிய தொழிற்சாலைகளும் தொழிற்பேட்டைகளும் அவர்கள் நிலத்தை ஆக்கிரமிக்க முற்படும்போதுதான், அத்தகைய முயற்சிகளுக்கு எதிராகக் கிளர்ச்சிகள் எழுகின்றன. அந்தப் பகுதி மக்களின் பங்களிப்போடு திட்டத்தைச் செயல்படுத்தினால், முதல் நாள் அன்றே பாதி கிணறைத் தாண்டிவிட்ட மாதிரிதான்!
குஜராத்தின் தொழிற்பேட்டை உருவாக்கக் கொள்கையில் கீழ்க்காணும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
1. கையகப்படுத்தும் நிலத்துக்குத் தற்போதைய சந்தை மதிப்பு ஈட்டுத் தொகையாக வழங்கப்படுவதோடு, தொழிற்சாலைகளுக்கு வழங்கும் நிலத்தில் சிறு பகுதி, நில உரிமையாளரோடு பகிர்ந்துகொள்ளப்படும்.
2. இடைக்கால நிவாரணம் வழங்கப்படும்.
3. பழங்குடியினரின் நிலத்தைக் கையகப்படுத்தும்போது கூடுதலாகச் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
4. கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் ஒரு பகுதி, அந்தக் கிராமத்தின் முன்னேற்றப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்.
5. அப்பகுதி மக்களின் திறமையை வளர்த்தல் முக்கியமானதாகக் கருதப்படும்.
6. குஜராத் தொழில் வளர்ச்சி கழகம், நிலத்தைக் கையகப்படுத்தித் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கும் வேலையை மேற்கொள்ளும்.
7. தொழிற்பேட்டைக்குத் தேவையான நிலத்தை நில உரிமையாளர்களின் சம்மதத்தோடு மட்டுமே பெற்றுக்கொள்ளப்படும்.
8. ஏதாவது பெரிய கட்டுமானங்கள் ஏற்கெனவே உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்படாது.
9. சந்தை விலையைச் சுதந்தரமான அமைப்புகள் கண்டுபிடிக்கும் (பல்கலைக்கழகம் போன்ற அமைப்புகள் இதில் ஈடுபடும்). அவர்கள் கண்டறியும் விலை, நிலத்துக்கான ஈட்டுத் தொகையாக வழங்கப்படும்.
10. கையகப்படுத்திய நிலத்தை தொழிற்சாலைகளுக்கோ அல்லது வேறு எதற்காகவோ வழங்கும்போது கிடைக்கும் நிகர இலாபத்தில், 10 சதவீதம் நில உரிமையாளருடன் பகிர்ந்துகொள்ளப்படும்.
11. நில உரிமையாளரின் நிலம் கிராமத்தில் உள்ள பட்சத்தில் அவரது முழு நிலமுமே கையகப்படுத்தப்படும் சூழலில், அவரது வாழ்வாதாரம் முற்றிலுமாகத் தடைப்படும். இந்தச் சூழலில், அவருக்கு 750 வேலை நாளுக்கான விவசாயக் கூலி மேற்கொண்டு நிவாரணமாக வழங்கப்படும்.
12. அந்த விவசாயியின் பெரும்பாலான நிலம் கையகப்படுத்தப்பட்டு, மிகச் சொற்ப வருமானத்தை மட்டுமே எஞ்சியுள்ள நிலத்திலிருந்து அவரால் ஈட்ட முடியும் என்ற சூழலுக்குத் தள்ளப்படும்போது, அவருக்கு 500 வேலை நாட்களுக்கான விவசாயக் கூலி மேற்கொண்டு நிவாரணமாக வழங்கப்படும்.
13. தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்தும்போது, மொத்த நில உரிமையாளர்களின் எண்ணிக்கையில் 50 சதவீதத்துக்கும் மேலாக மலைவாழ் மக்கள் இருந்தால், இந்தக் கையகப்படுத்தலால் அவர்களின் காடுகள் மீதான உரிமை மற்றும் காட்டுப்பொருட்களைப் பயன்படுத்த முடியாத சூழலுக்கு உள்ளானால், அவர்களுக்குக் கூடுதலாக, 500 வேலை நாட்களுக்கான குறைந்த பட்ச விவசாயக் கூலி, நிவாரணமாக வழங்கப்படும்.
14. பழங்குடியின நில உரிமையாளர்கள், நிலம் கையகப்படுத்தப்படுவதால் மாற்றிடங்களுக்குச் செல்லவேண்டிய சூழல் ஏற்படும்போது, கூடுமானவரை அவர்களின் இயற்கையான வாழ்விடங்களுக்கு அருகிலே, அவர்கள் கூட்டமாகச் சேர்ந்து வாழ்வதற்கு வழிவகை செய்யப்படும். இதனால், அவர்களது இன, மொழி மற்றும் கலாசார அடையாளங்கள் பாதுகாக்கப்படும்.
15. நிலம் கையகப்படுத்தப்பட்ட உரிமையாளரின் குடும்பத்திலிருந்து 18 முதல் 45 வயதுக்குள் உள்ள ஒருவருக்கு ஐ.டி.ஐ அல்லது அதற்கு இணையான கல்வி நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின்போது அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். குஜராத் தொழில் வளர்ச்சிக் கழகம் அவர்களுக்கு அந்தத் தொழிற்பேட்டையிலோ அல்லது அருகில் உள்ள தொழிற்பேட்டையிலோ வேலை கிடைக்க முயற்சி மேற்கொள்ளும்.
16. தொழிற்பேட்டையில் தொழிற்சாலைகளுக்கு நிலத்தை வழங்கியதில் கிடைத்த நிகர வருமானத்தில் 3 சதவீதம், வங்கியில் தனிக்கணக்கில் போட்டு வைக்கப்படும். இந்தப் பணம், பொதுக் காரியங்களான பள்ளிகள் கட்டுதல், சாலைகள் போடுதல், சமூகக் கூடங்கள் அமைத்தல் போன்ற பணிகளை, அந்தப் பகுதியில் உள்ள கிராமங்களில் செயல்படுத்தப் பயன்படுத்தப்படும்.
குஜராத்தில் ஏன் நிலம் கையகப்படுத்தல் எளிதாக உள்ளது என்பது இப்போது புரிந்திருக்கும்! குஜராத் அரசின் இப்படிப்பட்ட முன்னேற்பாடுகூட, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் நிலையைச் சற்று யோசித்துப் பாருங்கள். மேலே உள்ள செயல்பாட்டுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்!

தொழிலாளர்கள் நலன்:

வேகமாக வளர்ந்துவரும் குஜராத்தில் தொழிலாளர் பிரச்னைகளும் வேகமாக வளர்ந்து வருகின்றன. அது என்று வேண்டுமானாலும் பூதாகாரமாக வெடிக்கலாம் என்ற கருத்து பரவலாக உள்ளது. இங்கேயும் மோடியின் அரசு தக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளது. தொழிலாளர்களின் வயிற்றில் அடித்துத்தான் தொழில் வளர்ச்சி ஏற்படும் என்ற மாயையை மோடி தகர்த்து எறிந்துள்ளார்.

குஜராத்தில், கடந்த 2010-ம் ஆண்டிலிருந்து செப்டம்பர் 2011 வரையிலான கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளில், தொழிற்கூடங்களில் நடந்த ஸ்டிரைக் மற்றும் கதவடைப்பு மொத்தம் 43 தான். அதனால் சுமார் 6,800 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். சுமார் 75,000 மனித நாட்கள் வீணாயின. சிறப்புப் பொருளாதார மண்டலங்களை மையமாகக் கொண்டு, தொழில் வளர்ச்சி ஏற்படுவதால் அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்காக ஒரு சிறப்புச் சட்டத்தை குஜராத் அரசு 2004-ம் ஆண்டு அறிமுகம் செய்தது.
இன்றைய உலகமயச் சூழலில், தாற்காலிகப் பணியாளர்களைக் கொண்டே தொழில்களை நடத்தும் பழக்கம் மேலை நாடுகளைப் போன்று இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. ஏன், அரசுத் துறைகள்கூட ஆட்குறைப்பு நடவடிக்கைகளையும் விருப்ப ஓய்வு போன்ற வழிமுறைகளையும் மேற்கொள்கிறது. நிலையற்ற பொருளாதார நிலைமை உலகம் முழுதும் தொடர்ந்து நிலை கொண்டிருப்பதால் அரசும் சரி, தொழில் நிறுவனங்களும் சரி, நிரந்தரப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதைக் கூடுமானவரை தவிர்த்து வருகின்றனர்.
இந்தச் சூழலில், தொழிலையும் பெருக்கவேண்டும்; தொழிலாளிகளின் நலனையும் பாதுகாக்கவேண்டும். இவை இரண்டுமே ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். இதில், சீரான கொள்கைகளைச் செயல்படுத்துவது நாட்டின் தொடர் வளர்ச்சிக்கு மிக முக்கியம்.
குஜராத் மாநில அரசு கொண்டுவந்த தொழிலாளர் சட்டப்படி, ஏதாவது தொழிலாளியை வேலையை விட்டு நிறுத்தவேண்டுமானால், குறைந்தது 45 நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் கொடுக்கவேண்டும். அல்லது, அதற்கு இணையான சம்பளம் வழங்கவேண்டும்.
தொழில் நிறுவனமே மூடப்படுகின்ற சூழலில், வழக்கமான நிவாரணத்தோடு தொழிலாளர்களுக்கு, அவர்கள் தொடர்ந்து வேலை செய்த வருடத்துக்கு இணையாக ஒவ்வொரு வருடத்துக்கும் 15 நாட்கள் வீதம் சம்பளம் கொடுக்கப்பட வேண்டும்.
இது போன்ற சட்டத்தால், தொழிலாளர்கள் எந்தச் சூழலிலும் உடனே தெருவில் தள்ளப்படாமல், குறைந்தபட்சம் அடுத்த வேலை தேடும் வரையாவது சமாளித்துக்கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது.
நமது நாட்டில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர், முறைப்படுத்தப்படாத தொழிலாளர்கள். அவர்கள் வேலை செய்யும் சூழலே, ‘வேலை இருந்தால் பணிக்கு வா, இல்லையேல் வராதே’ என்பதுதான். குஜராத்தின் இந்தப் புதிய சட்டத்தின்மூலம் தொழிலாளிகளுக்குக் குறைந்தபட்ச தொழில் பாதுகாப்போடு பி.எஃப், கிராஜுவிட்டி, இன்ஷூரன்ஸ் போன்ற அம்சங்களும் கிடைக்கின்றன.


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service