குஜராத்தில் தடையில்லா மின்சாரம் கிடைப்பது எப்படி?”

April-22-13

மின்சாரத் தட்டுப்பாடு வீட்டின் வளர்ச்சியையும் நாட்டின் வளர்ச்சியையும் பாதிக்கிறது. சாதாரணக் குடிமக்களுக்கு தெரிந்த இந்த விஷயம், ஏன் நம் ஆட்சியாளர்களுக்குப் புரியவில்லை? இதற்கு முதற்காரணம் ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் உள்ள பெரிய இடைவெளி. மக்களின் பிரச்னைகளைப் புரிந்துகொள்ளும் திறமை இல்லாதவர்கள் ஆட்சியாளர்கள் ஆனது மற்றொரு காரணம்.

குஜராத்தில் 24 மணி நேரமும் தடையில்லாத மின்சாரம் கிடைக்கிறது. அதுவும் மும்முனை மின் இணைப்பு. 2011-ம் ஆண்டுக் கணக்குப்படி குஜராத்தில் மொத்தம் 18,066 கிராமங்கள் உள்ளன. இதில் 18,031 கிராமங்களுக்கு 2006-ம் ஆண்டே மின்சாரம் போய்ச் சேர்ந்துவிட்டது. அதோடு, அவற்றைச் சார்ந்த சுமார் 9,700 குக்கிராமங்களும் மின்சார ஒளியைப் பெற்றுவிட்டன. மீதமுள்ள 35 கிராமங்களுக்கு மட்டும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

குஜராத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், அந்த மாநிலத் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்தபின், மீதம் இருக்கும் உபரி மின்சாரத்தை 16-க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு வழங்கிவருகிறார்கள். நமது வீட்டுக்கு வரும் மின்சாரம்கூட ஒரு வேளை குஜராத்திலிருந்து வந்ததாக இருக்கலாம்.
குஜராத்திலும் மின்தடை இருந்தது. கிடைத்த மின்சாரமும் தரமற்றதாகவும் குறைந்த மின்னழுத்தம் உடையதாகவும் இருந்தது. இதனால் 2003-ம் ஆண்டு ஜோதிகிராம் யோஜனா என்ற புதிய திட்டத்தை நரேந்திர மோடி தொடங்கினார். இந்தத் திட்டத்தின் நோக்கம், அனைவருக்கும் ‘தடையற்ற, தரமான மின்சாரம் வழங்குவதே’.

ஜோதிகிராம் யோஜனா திட்டத்தின்மூலம் குஜராத்தில் உள்ள 18,065 கிராமங்களுக்கு 24 மணிநேர மின்சாரம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக 1,290 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. விவாசயத்துக்கு மின்சாரம் வழங்குவதிலும் தனிக்கவனம் செலுத்தப்பட்டது. இதற்காக பிரத்தியேக மின் இணைப்புகளை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
முதல்கட்டமாக விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்குவதற்காகப் பிரத்யேக மின் இணைப்பு வலை ஒன்று அமைக்கப்பட்டது. அதற்காக 2,559 மின்மாற்றிகள் (டிரான்ஸ்ஃபார்மர்கள்) நிறுவப்பட்டன. மற்ற உபயோகங்களுக்கு (வீடுகள், தொழிற்சாலைகள்) தனி இணைப்பு ஒன்று அமைக்கப்பட்டது. ஓர் இணைப்பில் தடங்கல் ஏற்பட்டால், மற்ற இணைப்பு மூலம் நிலைமையைச் சமாளிக்க முடியும். இதற்காக 76,518 கிலோமீட்டர் தூரத்துக்குப் புதிய மின்கம்பிகள் போடப்பட்டன.வெறும் 30 மாதங்களில் திட்டமிடப்பட்டுச் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது இந்தத் திட்டம்.
குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவி ஏற்றபோது, 2000-01-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின்படி, குஜராத் மின்சார வாரியம் 2,542 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கியது. ஆனால், 2006-ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ம் தேதி அன்று குஜராத் மாநில மின்சார வாரியம், 200 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது என்ற செய்தி வெளியானது.

மின்சாரத் திருட்டு:

நரேந்திர மோடி முதல்வராகப் பதவி ஏற்றபோது, மற்ற மாநிலங்களைப் போலவே குஜராத்திலும் மின்சாரத் திருட்டு, மின் கட்டண பாக்கி போன்றவை நடைமுறையில் இருந்தன. ஏதோ சாமானியர்கள் மட்டும்தான் இப்படிச் செய்துவந்தார்கள் என்று எண்ணிவிடாதீர்கள். பெரிய தொழிற்சாலைகளும் அரசியல் பெரும் புள்ளிகளும் இத்தகைய வேலைகளைச் சர்வசாதாரணமாகச் செய்துவந்தனர். மின்சார வாரியத்தின் நஷ்டத்துக்கு இதுதான் முதல் காரணம் என்பதை மோடி அரசு உணர்ந்தது.

எனவே முதலில் ‘களை’ எடுக்கும் வேலையை மோடி தொடங்கினார். மின்சாரத் திருட்டைத் தடுக்கத் தனியாகக் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. கண்காணிக்க ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் 500 பேர் பணியில் அமர்த்தப்பட்டனர். இதன்மூலம் பல்லாயிரக்கணக்கான திருட்டு இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மின் திருடர்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டதோடு, மின்சாரக் கட்டணம் வட்டியும் முதலுமாக வசூலிக்கப்பட்டது.

2003-ம் ஆண்டு மின்சாரத் துறையை முதல்வர் நரேந்திர மோடி தன்வசம் வைத்துக்கொண்டார். மிகப்பெரிய சீர்திருத்தத்தை மேற்கொள்ளப் புறப்படும்போது, கடுமையான எதிர்ப்புகளைச் சமாளிக்கவேண்டி வரும் என்பதற்காகவும் மின்சாரத் துறைக்கு அரசு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை உணர்த்தவும் முதல்வரே இத்துறையைத் தன் வசம் வைத்துக்கொண்டார்.

இந்தியாவிலேயே முதன்முறையாக மின்சாரத் துறை முழுவதையும் கணினிமயமாக்கினார் நரேந்திர மோடி. மாநிலத்தில் உள்ள அனைத்து மின்சார அலுவலகங்களும் அவற்றின் கிளை அமைப்புகளும் இணையம் வழியாக இணைக்கப்பட்டன. இதனால் உண்மையான தகவல்கள் எந்த நேரத்திலும் எளிதாகக் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டது.

ஆற்றல் காப்பாளர்கள்:

மாநிலம் முழுதும் உள்ள பள்ளிக்கூடங்களில் ‘ஆற்றல் காப்பாளர்கள் குழு’ அமைக்கப்பட்டது. இன்று, பள்ளி மாணவர்கள் தங்கள் வீடு, அக்கம்பக்கத்தினர் வீடுகள், கிராமம், தங்கள் பள்ளி ஆகிய இடங்களில் ஆற்றல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தங்கள் பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று, ஆற்றல் தணிக்கை செய்கின்றனர். எத்தகைய சூழ்நிலை அந்த வீட்டில் இருக்கிறது, அவர்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தும் முறை எப்படி உள்ளது, எப்படிப்பட்ட மின்சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர் போன்றவற்றை அவர்கள் அப்போது கண்டறிந்து, யோசனைகள் சொல்கின்றனர். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன் மூலம் ஆற்றல் சார்ந்த விழிப்புணர்வு ஊட்டப்படுகிறது.

இந்த விழிப்புணர்வுப் பிரசாரத்தில் சுமார் 1,800 பள்ளிகளை சார்ந்த சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 2008-09-ம் ஆண்டுக் கணக்குப்படி சுமார் 9,000 வீடுகளில் ஆற்றல் தணிக்கை நடைபெற்றுள்ளது.

மின் உற்பத்தி:

மின் உற்பத்தியைப் பெருக்குவதற்காக காற்றாலை மின்சாரம், சூரிய சக்தி மின்சாரம், நீர் மின் உற்பத்தி, நிலக்கரியிலிருந்து அனல் மின்சக்தி, எரிவாயுவிலிருந்து மின்சாரம், கடல் அலையிலிருந்து மின்சாரம் என்று எங்கெல்லாம் மின்சார உற்பத்தி செய்ய முடியுமோ அங்கெல்லாம் கவனம் செலுத்தப்பட்டது.

2006-ம் ஆண்டுக் கணக்குப்படி, குஜராத்தில் 132 கிராமங்கள் முழுதும் சூரிய சக்தி மின்சாரத்தைப் பயன்படுத்தி வருகின்றன. மின் கம்பிகள் செல்லமுடியாத மலைக் கிராமங்களில் சூரிய ஒளி மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. அரசு அலுவலகங்களிலும் தனியார் கட்டடங்களிலும் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கப்படுவதை அங்கு பார்க்க முடிகிறது.

கட்டாந்தரை கட்ச் பாலைவனத்தையும் குஜராத்தின் நீண்ட கடற்கரையையும்கூடப் பணம் விளையும் பூமி ஆக்கிவிட்டார் மோடி என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. வறண்ட பாலைவனமாக இருந்தாலும் காற்றுக்குப் பஞ்சம் இருக்காது. இயற்கையின் இந்த அற்புதக் கொடையை ஏன் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது என்று எண்ணியதன் விளைவுதான் காற்றாலை மின் உற்பத்தி. குஜராத்தில் 2006-ம் ஆண்டில் 338 மெகாவாட் மின்சாரம் காற்றாலைகளிலிருந்து கிடைத்தது. அதுவே, 2011-ம் ஆண்டு 2,175 மெகாவாட் மின்சாரமாக அதிகரித்தது. இது சுமார் 545 சதவீத வளர்ச்சி.

இலவச மின்சாரம் இல்லை:

குஜராத் மின்துறை முதன்மைச் செயலராக இருக்கும் டி.ஜெகதீச பாண்டியன், குஜராத்தில் விவசாயிகளுக்கு ஏன் இலவச மின்சாரம் வழங்கப்படவில்லை என்பது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர், ‘இலவசமாக மின்சாரத்தை வழங்கும்போது, ஒரு மணி நேரம் ஓடவேண்டிய ஒரு மின்சார மோட்டாரை ஒரு விவசாயி இரண்டு மணி நேரமோ அல்லது அதற்கு மேலோ இயக்குவார். காரணம் மின்சாரம் இலவசம்தானே, தண்ணீர் தாராளமாக வரட்டுமே என்று. இதன்மூலம் மின்சாரம் வீணாவது ஒரு புறம் என்றால் மறுபுறம் நிலத்தடி நீரும் வீணாகி, நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விடும்’ என்றார்.

தமிழகத்தில் புதிதாக மின் இணைப்பு பெறவேண்டும் என்றால் மாத கணக்கில் நடையாக நடக்க வேண்டியுள்ளது. அதுவும் சில இடங்களில் அலுவலர்களை, அதிகாரிகளை ‘கவனிக்க’ வேண்டும். அப்போதுதான் ‘காரியம்’ நடக்கும். ஆனால் குஜராத்தில் அப்படியல்ல. இன்று விண்ணப்பித்தால், நாளையே மின் இணைப்பு கிடைத்துவிடும்.

2012 ஜூலை 30-ம் தேதி முதல் இரண்டு நாட்கள் தலைநகர் தில்லி உள்பட 19 மாநிலங்கள் இருளில் மூழ்கின. 60 கோடி மக்கள் அல்லல்பட்டனர். உலகமே சிரித்தது. இந்தியா எங்கே ‘சூப்பர் பவர்’ ஆகப்போகிறது என்று ஏளனம் செய்தது. ஆனால் குஜராத் மட்டும் எந்தவிதத் தடையும் இன்றி மின்னொளியில் மிதந்தது.


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service