இப்போதுள்ள புதிய கலாச்சாரம், புதிய தொழில்நுட்பங்களின்படி கொள்கைகளை மாற்றிக் கொள்ளவேண்டும்”

September-27-13

இளைஞர்களின் திறன் மேம்பாடு குறித்த தேசிய கருத்தரங்கம் குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்துக்கு இந்திய தொழிற்சாலைகள் கூட்டமைப்பு மற்றும் குஜராத் மாநில தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

இந்த கருத்தரங்கத்தில் கல்லூரி மாணவர்கள், வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த திறன்வளர் பயிற்சியாளர்கள், கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்து நரேந்திர மோடி பேசியது: இந்தியாவில் 67 சதவீதம் இளைஞர்கள் உள்ளனர். செயல்திறன் வாய்ந்த இளைஞர்கள் அதிகம் பேர் உள்ளனர். ஆனால் இந்த இளைஞர்களுக்கு திறன்வளர் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை வழங்கி ஊக்குவிக்க மத்திய அரசு தவறிவிட்டது.

இந்தியாவிலேயே முதன்முறையாக இளைஞர்களுக்கு திறன்வளர் பயிற்சி அளிப்பதற்காக திறன்வளர் பல்கலைக்கழகம் குஜராத்தில்தான் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பல்கலைக்கழத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். இதன்மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.

ஜெர்மனி, மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் குறுகிய காலத்துக்குள் முன்னேறியவை. அந்த நாடுகளை நாமும் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளவேண்டும்.

இப்போது இந்திய அரசு பழைய அரசியலமைப்புக் கொள்கைகளின்படியே செயல்பட்டு வருகிறது. இப்போதுள்ள புதிய கலாச்சாரம், புதிய தொழில்நுட்பங்களின்படி கொள்கைகளை மாற்றிக் கொள்ளவேண்டும்.

கடந்த 2008-ஆம் ஆண்டு திட்டக் கமிஷன் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டது. இதில் இந்தியாவில் உள்ள 10 சதவீத இளைஞர்கள் திறன்வளர் பயிற்சிகளை பெற்றுள்ளனர். அவர்களில் வெறும் 2 சதவீதம் பேர் மட்டுமே வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளையில், கொரியாவில் 98 சதவீதம், ஜெர்மனியில் 78  சதவீதம், பிரிட்டனில் 68 சதவீதம் என வேலைவாய்ப்பு விகிதங்கள் உள்ளன. ஆனால் இந்தியாவில் 2 சதவீதம் என்ற அளவிலேயே வேலைவாய்ப்பு விகிதம் உள்ளது. இதற்கு காரணம் மத்திய அரசின் அக்கறையின்மையே ஆகும். இப்போது நாளுக்குநாள் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது. இதில் மத்திய அரசு கவனம் செலுத்தவில்லை.

இளைஞர்களுக்கு திறன்வளர் பயிற்சியை அளித்தால், சொந்தக் காலில் நின்று தாங்களே வேலைத் தேடிக் கொள்வார்கள். இளைஞர்கள் முன்னேறினால் இந்திய ரூபாய் மதிப்பு உயரும் என்ற நம்பிக்கை உள்ளது.

குஜராத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் பிராட்பேண்ட் சேவை வழங்கப்பட்டுள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உறுதி அளிக்கப்படுகிறது. இதேபோல டிப்ளமோ, பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் விரைவில் வேலைவாய்ப்புக்கு உறுதி அளிக்க குஜராத் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆனால் மத்திய அரசு இளைஞர்களுக்கு திறன்வளர் பயிற்சிகளை அளிப்பதில் அக்கறை காட்டவில்லை. கடந்த 2008-ஆம் ஆண்டு தேசிய திறன் வளர் மேம்பாட்டு ஆணையத்தை மத்திய அரசு தொடங்கியது. அது இன்றுவரை முழுமையாக செயல்படவில்லை.

இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு 500 வகையான திறன்வளர் பயிற்சிகள் அளிப்பதே குறிக்கோள் என்று கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் தெரிவித்திருந்தார். ஆனால் சீனாவில் 50,000 வகையான பயிற்சிகள் வழங்க முயற்சி செய்து வருகிறார்கள்.

இளைஞர்களுக்கு திறன்வளர் பயிற்சிகள் வழங்கினால் மட்டும் போதும், அவர்களே வேலைவாய்ப்பை பெறுவார்கள் என்றார் நரேந்திர மோடி.

இந்த தொடக்க நிகழ்ச்சியில் குஜராத் மாநில தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் செüரப் படேல், உலக வங்கியின் (தெற்காசிய மண்டலம்) நிர்வாகி ஜான் ப்ளூம் ப்யூஸ்ட், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலின் தலைவர் எஸ். மான்தா, உலக வங்கி முதுநிலை கல்வி அதிகாரி நளின் ஜீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service