இந்த நாள் தேசிய வலிமை நாள், சுய நம்பிக்கை நாள்.”

January-26-14

நாம் 65-வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறோம். 64 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் நமது நாடு குடியரசு ஆனது. அரசியல் சாசனம் அமலுக்கு வந்தது. இந்த நாள் தேசிய வலிமை நாள், சுய நம்பிக்கை நாள்.

‘மோடி எல்லாம் சரிதான், இந்தியாவை பற்றிய உங்கள் எதிர்கால திட்டம் என்ன?’ என்று பலரும் நீண்ட தலையங்கங்கள், சமூக வலைத்தளங்கள் மூலமாக என்னை கேட்டிருக்கிறார்கள்.

ஒரு தனி மனிதன் அல்லது ஒரு பொருள், இந்தியாவை பற்றிய எதிர்கால திட்டத்தை தனதாக உருவாக்கி விட முடியாது என்பதை கண்டிப்பாக புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவை பற்றிய திட்டம் என்ற வகையில், நான் சில அம்சங்களை பகிர்ந்துகொள்ளக்கூடிய வாய்ப்பினை கடந்த வாரம் பாரதிய ஜனதா தேசிய கவுன்சில் கூட்டம் வழங்கியது.

குடியரசு தினம் நம் ஒவ்வொருவரிடமும் வலிமையான உணர்ச்சிகளை நிரப்புகிறது. இந்தியாவின் ராணுவ பலத்தை உலகுக்கு அணிவகுப்பு காட்டுகிறது. அதை காணும் போது மனம் நிறைகிறது.

இந்தியாவை குறித்த திட்டம் இன்னொரு முறை நம்மை வீர வணக்கம் செய்ய வைக்கிறது. அது சகிப்புத்தன்மைக்காக மட்டுமல்ல, எல்லா அம்சங்களிலும் பொருந்தும். தனிப்பட்ட ஒவ்வொரு மனிதரின் உணர்வுகளும் மதிக்கப்படும். நமது பெண்கள், ஆண்கள் ஆகிய இருபாலாரின் சுயநலமற்ற தேசப்பற்றும் சமநிலை கொண்டவை.

இந்த நாள் நமது சிறப்பு வாய்ந்த கடந்த காலத்தை நினைத்துப்பார்க்க வைக்கிறது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட மாபெரும் வீரர்கள், வீராங்கனைகளின் தியாகத்தை நினைத்துப்பார்ப்போம். நாம் பெருமிதம் கொள்ளத்தக்க வகையில் அமைந்துள்ள அரசியல் சாசனத்தை உருவாக்கிய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களை நினைத்துப்பார்ப்போம்.

இந்தியாவை அதன் வடிவில் உருவாக்கிய புனிதமான அரசியல் சாசனத்தின் உள்ளடக்கம் குறித்த நமது நம்பிக்கையை, உறுதியை புதுப்பித்துக்கொள்வோம். பாபா சாகேப் அம்பேத்காருக்கு நமது மரியாதையை செலுத்துவோம். அவரது பங்கு பணிகள் என்றென்றும் நினைவுகூரத்தகுந்தவை. ஒரு காலத்திலும் மறக்க முடியாதவை.

முக்கியமாக இந்த நாள் சுயபரிசோதனை செய்வதற்கான நாள் ஆகும். இந்திய குடியரசு எதற்காக? அதன் அர்த்தம் என்ன? கடந்த 70 ஆண்டுகளில் அது எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது? வரக்கூடிய காலத்தில் அது என்ன செய்ய வேண்டிய அவசியம் உள்ளது? இதையெல்லாம் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

சத்தியம், சமாதானம், அகிம்சை ஆகிய மூன்றும்தான் இந்தியாவுக்கான திட்டத்தின் மையப்பொருள். நமது சமய நூல்கள் சத்யமேவ ஜெயதே என்று கூறுகின்றன. அது, வாய்மையே வெல்லும் என்பதாகும். நீதியின் சக்கரங்கள் வேகமாக சுழலுகிற இந்தியா, ஒவ்வொரு இந்தியனுக்கும் வகுப்பு, சாதி, இனம் பற்றி பார்க்காமல் சமத்துவம் ஆகியவற்றுடன் கூடிய இந்தியாவை உறுதி செய்ய உறுதி பூண்டுள்ளேன்.

அப்படிப்பட்ட இந்தியாவில் அநீதி செல்லுபடியாகாது. அதே போன்று அகிம்சை என்னும் கொள்கை நினைவுக்கு எட்டாத காலத்தில் இருந்து நமது தேசத்தை ஆசீர்வதித்து வந்திருக்கிறது.

இது புத்தர், மகாவீரர், மகாத்மா காந்தி வாழ்ந்த பூமி. அகிம்சை தான் மிக உயர்ந்த தர்மம். இதைத்தான் நமது சமய நூல்கள் கூறுகின்றன. இந்தியாவுக்கான திட்டத்தில் வன்முறைக்கு எந்த வகையிலும் அல்லது ரூபத்திலும் இடம் கிடையாது.

இந்தியாவுக்கான திட்டம், சுவாமி விவேகானந்தரின் நம்பிக்கையான, நிச்சயமான இந்தியா என்ற கனவை நனவாக்கும். இந்தியாவுக்கான திட்டம், அனைவரும் வளத்துடனும், சந்தோஷத்துடனும், நோய் நொடியின்றி வாழும் வாய்ப்பினை, நாட்டத்தினை ஏற்படுத்தும்.

ஒவ்வொரு இந்தியனும் வறுமையின் பிடியிலிருந்து விடுவிக்கும் வாய்ப்பை தந்து, அதிகாரம் வழங்குவதாக அமையும். பெண்களின் பாதுகாப்பை, கண்ணியத்தை நாம் ஒரு சமூகமாக சேர்ந்து உறுதி செய்யாதவரையில் பெண்களுக்கு அதிகாரம் வழங்குதல் என்ற கனவை சாதித்துக்காட்ட முடியாது.

நமது மூதாதையர் பெண் தெய்வங்களை பல நூற்றாண்டு காலமாக வழிபட்டு வந்துள்ளனர். அப்படி இருக்கையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நாம் ஏன் சகித்துக்கொள்ள வேண்டும்? பெண்கள்தான் இல்லத்தரசிகள். அவர்கள் தேசத்தையும் நிர்மாணிப்பவர்கள் என்று நாம் பார்க்க வேண்டும்.

ஒரு மோசமான கூட்டாட்சியால் இந்தியாவின் வளர்ச்சி சாத்தியப்படாது. நமது அரசியல் சாசனத்தை நிர்மாணித்தவர்கள், மத்திய அரசும், மாநில அரசுகளும் முன்னேற்றப்பாதையில் சம அதிகாரம் பெற்ற வலுவான கூட்டாட்சி அமைப்பினை கனவு கண்டனர்.

யாரும் பெரியவர்கள் அல்ல. யாரும் சிறியவர்களும் அல்ல. மத்திய அரசின் கருணையில் மாநில அரசுகள் வாழ வேண்டும் என்ற மனோபாவத்தை நாம் மாற்ற வேண்டும். நமது நாட்டின் கஜானாவில் உள்ள பணம், நாட்டு மக்களின் பணம்தான்.

அனைத்து முதல்-மந்திரிகள், பிரதமர், மாநில மந்திரிகள், மத்திய மந்திரிகள் கூட்டாக உழைப்பதின் பலனாக நாட்டின் முன்னேற்றம் அமைய வேண்டும் என்று நாங்கள் கனவு காணுகிறோம். உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் கூட, உடன் குழுவாக இணைந்து உழைத்து, வலுவான, ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்க வேண்டும்.

பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் , குடியரசு தின சிறப்பு கட்டுரை


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service